‘நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை' : பள்ளி கல்வித்துறை அமைச்சர்
சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாலியல் புகார்கள் குறித்து புகார் தெரிவிக்க 1098, 14417 என்ற இலவச அழைப்பு எண் குறித்து வகுப்பறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளி கல்வித்துறை சார்பில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து புத்தகங்களிலும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் அச்சடிக்கப்படும். தற்போது மாணவர்களின் நோட்டு புத்தகங்களில் இந்த இலவச அழைப்பு எண்கள் ரப்பர்ஸ்டாம்பு மூலம் இடம் பெறச்செய்யப்படும்.
அரசு பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரையிலும் போக்சோ சட்டம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
தனியார் பள்ளிகள் இதுதொடர்பான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். தங்களுடைய பள்ளியின் பெயர் கெட்டுப்போய்விடும் என்று கருதாமல், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். நடப்பு ஆண்டை பொறுத்தமட்டில் பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை.
1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் படித்தார்கள் என்ற விவரம் மதிப்பெண் சான்றிதழ்களில் இடம் பெறச்செய்யப்படும். மாணவர்களின் கற்றல் குறைபாட்டை சரி செய்வதற்கு இல்லம் தேடி கல்வி திட்டம் போதுமானதாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளை எதிர்க்கொள்வதற்கு வசதியாக 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.