தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்திருக்கும் தகவலில், “தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.
அந்தவகையில், இன்று (21.11.2021) திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (22.11.2021) கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இவையன்றி மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இவையன்றி டெல்டா மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும். 24-ம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது