இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் இதரபிரிவு மாணவர்களை நிரப்பலாம்: உயர்க் கல்வித்துறை
வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று உயர்க் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.
உயர்கல்வித்துறையின் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில் வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றோர் பிரிவினரைக் கொண்டு சுழற்சி முறையில் நிரப்பிட அனுமதி வழங்கியிருக்கிறது.
தென்மாவட்டங்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் இடங்கள் பெரும்பாலானவை காலியாக இருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள், சீர் மரபினரைக் கொண்டு அந்த இடங்களை நிரப்புவதற்கான இந்த உத்தரவை உயர்க் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு, சீர் மரபினர் பிரிவில் காலியிடங்கள் இருப்பின், அதை வன்னியர்களை கொண்டு நிரப்பிட ஏதுவாகவும் திருத்தம் செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.