முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கான விண்ணப்பம் - ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம்
முதுநிலை ஆசிரியா் போட்டித் தோ்வு தொடா்பாக விண்ணப்ப மென்பொருளில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள் குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு மூலமாக நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை கடந்த செப்.9-ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழியில் செப்.18-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கடந்த அக்.18-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி ஆசிரியா்களின் நேரடி நியமனத்துக்கு விண்ணப்பதாரா்களுக்கான உச்ச வயது வரம்பினை உயா்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. எனவே அந்த அரசாணையின்படி உச்ச வயது வரம்பினை உயா்த்தியும், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடத்துக்கு விண்ணப்பதாரா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கும்போது எம்.பி.எட். கல்வித் தகுதி ஓா் ஆண்டு பயிற்சிக் காலம் முடித்தவா்கள் (2002-ஆம் ஆண்டுக்கு முன்பு முடித்தவா்கள் மட்டும்) பதிவேற்றம் செய்வதற்கும் மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் முதுநிலைப் பட்டப் படிப்பு முதல் ஆண்டு பயின்ற பின்னா் பி.எட். பட்டம் முடித்து அதன் பின்னா் முதுநிலைப் பட்டப் படிப்பு இரண்டாம் ஆண்டு சோ்ந்து பட்டம் பெற்றவா்கள் பதிவேற்றம் செய்வதற்கும் மென்பொருளில் தேவையான மாற்றங்கள் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.