NEET 2021 - விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு
NEET 2021 - விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு
இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் 2021 தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச்
செலுத்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை
மருத்துவப் படிப்புகளுக்கும் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் தேசியத் தகுதி
மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில்
இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட்
1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்
தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19
விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற
இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கு மாணவர்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை
விண்ணப்பித்தனர்.
அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல்
இன்று (ஆகஸ்ட் 14ஆம் தேதி) மதியம் 2 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம்
நாளை (ஆகஸ்ட் 15) இரவு 11.50 வரை நீட்டிக்கப்படும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
இதுகுறித்து என்டிஏ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மாணவர் சமுதாயத்தின்
தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம்
நாளை (ஆகஸ்ட் 15) இரவு 11.50 வரை நீட்டிக்கப்படும். ஏற்கெனவே நீட் 2021
தேர்வுக்கு விண்ணப்பித்து, கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மட்டுமே
இந்த அறிவிப்பு பொருந்தும்.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இனி மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது'' என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் வசதி முடிவடைந்த பின்பு, என்டிஏ நீட் தேர்வுக்கான
நுழைவுச் சீட்டை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.