Breaking News

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி - ராமதாஸ் கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை மாற்றப்பட்டு, டெட் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

''தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்பட உள்ள சான்றிதழ்களும் அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர் தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள் முழுமைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. கடைசியாக கடந்த 10ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தேன். இரு வாரங்களில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 80 ஆயிரம் பேருக்குக் கடந்த 7 ஆண்டுகளில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. அவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.