Breaking News

தமிழகம் முழுவதும் நாளைக்குள் 100 சதவீத ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தார் அனைவருக்குமே தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதற்காக முகாம்களை அண்மையில் தொடங்கி வைத்திருக்கிறோம்.

எல்லா மாவட்டங்களிலும் அந்த பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. செப்டம்பர் 1ம் தேதிக்குள் (நாளைக்குள்) 100 சதவீதம் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அனைவருக்கும் முழுமையாய் தடுப்பூசி போடப்படும்.

ஒன்றிய அரசின் சார்பில், செப்டம்பர் மாதம் ஒதுக்கீடாக ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 170 டோஸ் வர உள்ளது. இதில், 90,23,007 டோஸ் கோவிஷீல்டு மற்றும் 14,74,100 டோஸ் கோவாக்சின் வரவிருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், தமிழக அளவில் நாமக்கல் முதலிடத்திலும், கிருஷ்ணகிரி 2வது இடத்திலும் உள்ளது என்றார்.