அரசு பள்ளிகளில் மாணவர் தரத்தை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசனை
அரசு பள்ளிகளில் மாணவர் தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை!
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறையை அதிகரிக்கவும், அதன்
வாயிலாக தனியார் பள்ளிகளில் இருந்து இடம்பெயரும் மாணவர்களின் விருப்பத்தை
நிறைவேற்றி, கல்வித் தரத்தை உயர்த்தவும், அரசு ஆலோசித்து வருகிறது. அரசின் இந்த
முயற்சிக்கு, 'சபாஷ்' தெரிவித்துள்ள கல்வியாளர்களும், பெற்றோரும், 'இது போன்ற
நல்ல நடவடிக்கைகள், அரசு பள்ளிகளின் தலையெழுத்தையே மாற்றி விடும்' என்கின்றனர்.
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், பல பெற்றோருக்கு முறையான வருவாய் இல்லை.
அதனால், இத்தனை ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் பிள்ளைகளை,
அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
வரவேற்பு
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள்,தனியார்
பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு மாறி வருவர். ஆனால், கடந்த ஆண்டு இந்த
எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தது. 5.18 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளை நாடி வந்து
சேர்ந்துள்ளனர். இதில், பல பெற்றோர் விரும்புவது ஆங்கில வழிக் கல்வியையே. தனியார்
பள்ளிகளை அவர்கள் விரும்பிச் சென்றதற்கான காரணமே, ஆங்கில வழிக் கல்வி தான்.
தற்போது, அந்தத் திசையில் தமிழக அரசு முனைப்பு காட்டுவது வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலகெங்கும் ஆங்கிலமே கோலோச்சுகிறது. எங்கே மேற்படிப்புக்கு அல்லது வேலைக்குப்
போனாலும், ஆங்கிலத்தை வைத்து சமாளித்து விட முடியும். அதற்கு, ஆங்கில வழிக் கல்வி
வழியாக அத்தனை பாடங்களையும் படித்து விடுவது, கூடுதல் அனுகூலமாக இருக்கும். இதை
ஏற்கனவே உணர்ந்து, அதற்கான முயற்சிகளைச் செய்துள்ளது ஆந்திர மாநிலம். அங்கே,
மாநில அரசே ஆங்கில வழிக் கல்வியைத் தான் முதன்மைப்படுத்துகிறது. எழுத்தாளரும்,
தலித் ஆய்வாளருமான காஞ்சா அய்லய்யா போன்றோர், ஆந்திர மாநிலத்தில் ஆங்கில வழிக்
கல்வி வலியுறுத்தப்படுவதை, 'புரட்சிகரமான முடிவு' என்றே வர்ணிக்கின்றனர்.
பிற்படுத்தப்பட்டோர், உலக சமூகங்களோடு ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு, ஆங்கிலமே
உறுதுணையாக இருக்கும் என்ற கருத்து அங்கே ஏற்பட்டுள்ளது.ஆந்திர முதல்வர்
ஜெகன்மோகன் ரெட்டியின் முயற்சியால், அங்கே வெளியிடப்படும் பள்ளி பாடப்
புத்தகங்களில், ஒருபக்கம் தெலுங்கு மொழியிலும், எதிர்ப்பக்கம் ஆங்கில மொழியிலுமாக
பாடங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
ஏழை, எளிய மாணவர்களின் மீட்சிக்கு உதவும் மொழி, உலகத்தின் திறவுகோல் ஆங்கில மொழி
தான் என்பதை ஆந்திரா புரிந்திருப்பதைப் போல், தமிழகமும் புரிந்து கொள்வது
வரவேற்கத்தக்கது என்கின்றனர், கல்வியாளர்களும், பெற்றோரும். அரசின் இதுபோன்ற
முயற்சிகளால், அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து, தலையெழுத்தே மாறி விடும் என்றும்
நம்புகின்றனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: பள்ளிக்
கட்டணம் தொடர்பாக புகார்களை, ஏற்கனவே உள்ள பாலியல் தொடர்பான புகாருக்கான எண்ணில்
தெரிவிக்கலாம் அல்லது 'இ - மெயில்' வாயிலாக தெரிவிக்கலாம். புகார்களை விசாரிக்க
தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விசாரித்து, புகாரில் உண்மை
இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும். கொரோனா ஊரடங்கால், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த
முடியாமல் அரசு பள்ளிகளை தேடி, பெற்றோரும், மாணவர்களும் வருகின்றனர்.
நடவடிக்கை
அப்படி தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்து வரும்
மாணவர்களுக்காக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை பெற்றோர்
எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அரசு
பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக,
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், போதுமான ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
கொரோனா காலத்தில், பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர், மாணவர்கள்,
ஆசிரியர்களின் கருத்துக்கள் கேட்டறிந்து செயல்படுவோம். பத்தாம் வகுப்பு முடித்த
மாணவர்களுக்கு, தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின்
எதிர்கால நலன் கருதி, பெற்றோரிடம் இருந்து வரும் கருத்துக்கள் தொடர்பாக, ஆலோசனை
செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.