அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அதிகப்படுத்த நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை அமைச்சர்
தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு இடம்பெயரும் மாணவர்களின் நலனுக்காக அரசு
பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்
என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் உய்யக்கொண்டான் வாய்க்காலில் ரூ.6 கோடி
மதிப்பில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர்
அளித்த பேட்டி: பள்ளிக்கல்வி கட்டணம் தொடர்பாக புகார் அளிப்பதற்கு, ஏற்கனவே
பாலியல் தொடர்பான புகார் அளிப்பதற்கு வழங்கப்பட்ட எண்ணிலேயே தொடர்பு கொள்ளலாம்.
அல்லது இ மெயில் ஐடி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாது பள்ளிகள் குறித்த வேறு ஏதாவது புகார்கள்
இருந்தாலும் அந்த உதவி எண்ணிலேயே தொடர்பு கொள்ளலாம். வரக்கூடிய புகார்களை
கவனத்தில் எடுத்துக்கொள்ள தனியாக ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புகார்களில்
உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை
எடுக்கப்படும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல்
அரசு பள்ளியை பெற்றோர்கள் நாடி வருகிறார்கள்.
இதற்காக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதன்படி ஆங்கில வழிக்கல்வியை அதிகப்படுத்த பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள்,
போதுமான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.அதேபோல் கொரோனா காலம் என்பதால் மாணவர்கள், பெற்றோர்கள கருத்துக்களை
கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதற்கு தகுந்தார்போல் பள்ளிக்கல்வித்துறையில்
திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு
அனைவரும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.