தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தள்ளிவைக்கப்படுமா இன்று முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தள்ளிவைக்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை)
முக்கிய ஆலோசனை நடைபெற இருக்கிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வுதமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச்
மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். ஆனால் கொரோனா நோய்த்தொற்று
காரணமாக இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதத்துக்கு தள்ளிப்போனது.
அதன்படி, அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.ஆனால்
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி நடைபெற இருப்பதால், அதற்கு மறுநாள்
நடக்க இருந்த பிளஸ்-2 மொழிப்பாடத் தேர்வை மட்டும் வேறொரு நாளுக்கு தள்ளி வைத்து
அரசுத் தேர்வுத்துறை கடந்த 12-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, 5-ந்
தேதி (புதன்கிழமை) ஆங்கிலம் பாடத்துடன் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.
கொரோனா பாதிப்பு உயருகிறது
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால், அடுத்த
மாதம் 4-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு
பொதுத்தேர்வை ரத்து செய்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்தும் மத்திய
கல்வித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில்
நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த
சூழ்நிலையில், பிளஸ்-2 தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? அல்லது
ஒத்திவைக்கப்படுமா? என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம்
நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று
கூறினார்.முக்கிய ஆலோசனை அதன்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று
(வியாழக்கிழமை) முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி
இருக்கின்றன. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தலைமை
செயலாளர் ராஜீவ் ரஞ்சன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பொதுத்தேர்வை
கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜெயந்தி, லதா, அமிர்தஜோதி,
நிர்மல்ராஜ், பள்ளிக்கல்வி இயக்குனர் உள்பட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து
கொள்கின்றனர்.
ஒத்திவைக்கப்படுமா?
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த மாதம் 5-ந்
தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா?
அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்பது
போன்ற விவரங்கள் தெரியவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.