பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா நேற்று தலைமை செயலர் நடத்திய கூட்டத்தில் நடந்த ஆலோசனை என்ன
பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? நேற்று தலைமை செயலர் நடத்திய
கூட்டத்தில் நடந்த ஆலோசனை என்ன?
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா; தள்ளி வைக்கலாமா
என்பது குறித்து, தலைமை செயலர் நடத்திய கூட்டத்தில், சூழ்நிலைக்கேற்ப முடிவு
செய்து கொள்ளலாம் என்று, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் பிளஸ்
2 தேர்வை நடத்துவதா; ரத்து செய்வதா என்பது குறித்து, தலைமை செயலகத்தில் நேற்று
அவசர ஆலோசனை நடந்தது. ஆலோசனைதலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் நடந்த
கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பள்ளி கல்வி முதன்மை செயலர்
தீரஜ்குமார், பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள்
பங்கேற்றனர்.
கூட்டத்தில், கொரோனா இரண்டாம் அலை பரவல் நிலவரம், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை,
தடுப்பூசி நடைமுறைகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. பிளஸ் 2
மாணவர்களுக்கு மே, 5ல் பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை
சுட்டிக்காட்டி, தமிழக பிளஸ் 2 தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டுமா; அதற்கான
தேவையுள்ளதா என, அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில், பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி
நடத்தப்படுவதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த ஆண்டு கொரோனா பரவல்
துவங்கியிருந்த போதும், பிளஸ் 2 தேர்வுகளை மாணவர்களுக்கு பாதிப்பின்றி, உரிய
காலத்தில், தமிழக பள்ளி கல்வித்துறை நடத்தி முடித்தது.யோசனைஆனால், சி.பி.எஸ்.இ.,
தரப்பில், கடந்த ஆண்டு தேர்வை தள்ளி வைத்து விட்டு, பின் வேறு வழியின்றி, கொரோனா
பரவல் அதிகம் உள்ள காலத்தில், தேர்வை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதையும்
அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர்.
திட்டமிட்ட தேதியில் தேர்வை முடித்து விட்டால், மாணவர்களும் சுமை குறைந்து,
நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் உயர்கல்விக்கான ஆயத்த பணிகளுக்கு செல்ல
வசதியாக இருக்கும் என, அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர்.மாணவர்களுக்கு, இன்று
செய்முறை தேர்வுகள் துவங்குவதையும், அதிகாரிகள் எடுத்து கூறினர். இதையடுத்து,
செய்முறை தேர்வுகளை நடத்தி விட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப ஆலோசித்து கொள்ளலாம் என,
முடிவு செய்யப்பட்டதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post Comment