Breaking News

அரியர் மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு

அரியர் மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு
கொரோனா ஊரடங்கால், 'ஆல்பாஸ்' செய்யப்பட்ட, 'அரியர்' மாணவர்கள், செமஸ்டர் தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என, கல்லுாரிகளுக்கு, சென்னை பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.கொரோனா பரவலால் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த, 2019 - 2020ம் கல்வி ஆண்டில், இறுதியாண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும், ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்பட்டது. மற்ற ஆண்டு மாணவர்களுக்கும், அரியர் இருந்த மாணவர்களுக்கும், ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது.

இதை பின்பற்றி, சென்னை பல்கலையின் இணைப்பில் உள்ள, 145 கல்லுாரிகளின் மாணவர்களுக்கும், ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. இதில், 15 ஆண்டுகள் அரியர்கள் இருந்த மாணவர்கள் கூட, பட்டம் வாங்கும் அதிர்ஷ்டம் பெற்றனர். 

இதற்கிடையில், ஆல்பாஸ் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யும், ஆல் பாஸ் நடவடிக்கையை ஏற்கவில்லை என, அறிவித்தது.இதனால், சென்னை பல்கலையின் தேர்வு முடிவுகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. 

இந் நிலையில், அனைத்து கல்லுாரிகளுக்கும், சென்னை பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஏப்ரல் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்கள், தங்கள் மதிப்பெண்ணை உயர்த்தி கொள்ள, வரும், 21ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்குமாறும், பல்கலை தெரிவித்துள்ளது. இந்த சுற்றறிக்கை, கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.ஆல்பாஸ் ஆன செமஸ்டர் தேர்வை மீண்டும் கட்டாயம் எழுத வேண்டுமா என, பல்கலை தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.