பெண்களே சமையலறை அலமாரிகள், டைல்களை பராமரிக்கும் வழிமுறைகள்
பெண்களே சமையலறை அலமாரிகள், டைல்களை பராமரிக்கும் வழிமுறைகள்
வீடுகளில் சமையலறை அலமாரிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து
பராமரித்தோமானால் அவை பல ஆண்டுகள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் நீண்டு
உழைக்கும்.
பெண்களே சமையலறை அலமாரிகள், டைல்களை பராமரிக்கும் வழிமுறைகள்
பெரும்பாலான வீடுகளில் சமையலறை அலமாரிகள் நவீன கேபினட்டுகளுடன் உபயோகிப்பதற்கு
வசதியாகவும், பொருள்களை அடுக்கி வைக்க நேர்த்தியாகவும் பொருத்தப்பட்டிருப்பதைப்
பார்க்க முடியும். அதேபோல் அலமாரிகளும் பிவிசி அல்லது பிளைவுட்டால் கதவுகள்
பொருத்தப்பட்டு பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். இவற்றை குறிப்பிட்ட கால
இடைவெளியில் சுத்தம் செய்து பராமரித்தோமானால் அவை பல ஆண்டுகள் எந்தவிதப்
பிரச்சினையும் இல்லாமல் நீண்டு உழைக்கும்.
பராமரிப்பு முறைகள்:-
* பிவிசியினால் செய்யப்பட்ட அலமாரிகளைச் சுத்தம் செய்ய டிஷ்யு காகிதங்கள் அல்லது
பழைய துணிகளை உபயோகிக்கலாம். எண்ணெய் பிசுக்குப் பிடித்த பிவிசி கதவுகளை சுத்தம்
செய்ய முதலில் டிஷ்யு காகிதத்தில் இரண்டு மூன்று சொட்டுகள் ஏதாவது ஒரு எண்ணெயை
விட்டு அதைக்கொண்டு அந்தக் கதவுகளை சிறிது அழுத்தம் கொடுத்து தேய்க்கும் பொழுது
அதில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து
விடும்.* அதேபோல் கதவு இடுக்குகளில் படிந்திருக்கும் பிசுபிசுப்பை நீக்க முனை
மழுங்கிய கத்தியில் எண்ணெய் சொட்டுகள் விட்ட டிஷ்யு காகிதத்தை சுற்றி அதை
கதவிடுக்கில் விட்டு சுத்தம் செய்யலாம். எண்ணெய் பிசுக்கை நீக்க எண்ணெய் விட்டே
சுத்தம் செய்வதா என்று நீங்கள் வியக்கலாம். இதனால் எந்த ஒரு கெடுதலும் இல்லை.
முயற்சி செய்து பாருங்கள்.
மாடுலர் கிச்சன் டிராலிகளை சுத்தம் செய்வது கடினம் என்று நினைப்பவர்களுக்கு அதை
எளிதாக சுத்தம் செய்வதற்கு இதோ சில யோசனைகள்:-
* மாடுலர் கிச்சன் டிராலிகளை வெளியே இழுக்கும் பொழுது அதன் இரண்டு பக்கவாட்டிலும்
கிளிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். அந்தக் கிளிப்புகளை ஒருபுறம் கீழேயும்,
மறுபுறம் மேலே தூக்கி விட்டு டிராலிகளை எளிதாக தனியே கழற்ற முடியும்.
கழற்றிய டிராலிகளை சிறிய பிரஷ்களைக் கொண்டு அதில் படிந்திருக்கும் தூசுகளை
அகற்றலாம். அதேபோல் டிராலிகளைப் பொருத்தும் மெட்டல் சட்டங்களையும் இந்த
பிரஷ்களைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். அதன் பின்னர் இவற்றிற்கென்றே
பிரத்தியேகமாகத் தடவக்கூடிய எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி
சிறிய பெயிண்ட் அடிக்கும் பிரஷ் கொண்டு அந்த மெட்டல் சட்டங்களில் தடவலாம்.
டர்பன்டைன் எண்ணெயானது இந்த மாடுலர் கிச்சன் டிராலிகளுக்கும் அதன் மெட்டல்
பட்டைகளுக்கும் தடவ மிகவும் சரியான தேர்வாகும்.
* அந்த எண்ணெயை தடவிய சிறிது நேரத்திற்குப்பின் பழைய காட்டன் துணி கொண்டு அவற்றை
துடைத்து எடுக்கவும்.
* அதன் பின்னர் பஞ்சில் தேங்காய் எண்ணையை நனைத்து அந்தச் சட்டங்களின் மேல்
தடவவும். இவ்வாறு தடவுவதன் மூலம் டிராலியைப் பொருத்தி அவற்றை வெளியே இழுத்து
மூடுவது எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் எளிதான செயலாகி விடுகின்றன.
* வினிகர், பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் தண்ணீர் சேர்த்து
ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த திரவத்தை ஸ்பிரே செய்து கேபினட்,
டிராலிகளின் கம்பிகள் போன்றவற்றை மிகவும் அருமையாக மென்மையான ஸ்க்ரப் கொண்டு
சுத்தப்படுத்த முடியும்.
* சுத்தம் செய்த டிராலிகளை நன்கு ஈரம் பிழியப்பட்ட துணிகளைக்கொண்டு துடைத்து
எடுக்கவும். பின்பு டிராலிகளை ஈரம் போக உலர்த்தவும்.
* டிராலிகளை எடுத்துப் பொருத்துவதற்கு முன் அந்த அலமாரிகளின் அடியில் பாச்சை
உருண்டைகள் அல்லது கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி போன்றவை வராமல் இருக்க
கடைகளில் விற்கப்படும் பசை அல்லது மருந்துகளை லேசாகத் தடவிய பின்பு இந்த
டிராலிகளை எடுத்துப் பொருத்தவும்.
* இதுபோன்று வருடம் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்வதால் இவற்றை வெளியே
இழுத்து மூடுவது எளிதாவதோடு துருப்பிடிப்பதும் தவிர்க்கப்படுகின்றது. மேலும் அதிக
செலவு செய்து பொருத்தப்படும் இதுபோன்ற பொருள்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க
முடியாது. சரியாகச் சுத்தம் செய்து முறையாகப் பராமரித்தால் அவை நீண்ட நாள்
உழைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
*சில வீடுகளில் சமையலறை கேபினட்டுகள் உறுதியான மரம் அல்லது பிளைவுட்டுகளினால்
செய்யப்பட்டிருக்கும். இவற்றை சுத்தம் செய்ய இரும்பு நார் மற்றும் தண்ணீரைப்
பயன்படுத்தக்கூடாது. அதேபோல் ரசாயனம் அதிகம் கலந்துள்ள திரவங்களை உபயோகித்துச்
சுத்தம் செய்வதும் கூடாது. பேக்கிங் சோடாவுடன் தேங்காய் எண்ணெய் அல்லது வேறு
ஏதாவது எண்ணெயைக் கலந்து பசை போல் செய்து கொள்ளவும். அந்தப் பசையை
மரக்கேபினட்டுகளின் மீது தடவி பத்து நிமிடம் ஊறவைக்கவும். மென்மையான பிரஷ் அல்லது
ஸ்க்ரப் கொண்டு அவற்றைத் தேய்த்து பின்னர் மென்மையான காட்டன் துணி கொண்டு
அவற்றைத் துடைத்து எடுத்தால் அவற்றின் மீது படிந்திருக்கும் கறைகள் மட்டுமல்லாது
பிசுபிசுப்பும் போயே போச்!