Breaking News

இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த சத்தியமங்கலம் பெண்

இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த சத்தியமங்கலம் பெண்
இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் சத்தியமங்கலம் பெண் இடம் பிடித்துள்ளார்.

பெண் தொழில் அதிபர் டாக்டர் வித்யா

பவானிசாகர்:

ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என பல துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். ஆண்களுக்கு சரி சமமாக பெண்களும் பல சாதனைகளை சாதித்து காட்டி வருகிறார்கள். அது ஆராய்ச்சி துறையாக இருந்தாலும், விண்வெளி துறையாக இருந்தாலும், ராணுவ துறையாக இருந்தாலும், தொழில் முனைவோர்களாக இருந்தாலும் பெண்களின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இது நம்பும்படியாக உள்ளதா? என கேட்கலாம். ஆம். இதை நம்பித்தான் ஆக வேண்டும்.பட்டியலில் இடம் பிடித்த சத்தியமங்கலம் சாதனை பெண்ணின் சொத்து மதிப்பு ஒரு கோடி, 2 கோடி அல்ல. 2 ஆயிரத்து 870 கோடி ஆகும். அந்த சாதனை பெண்ணின் பெயர் டாக்டர் வித்யா வினோத். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் கோட்டக் வெல்த் மற்றும் ஹூரான் இந்தியா என்ற அமைப்பு தயாரித்த பட்டியலில் வெளியிடப்பட்டு உள்ளது.

டாக்டர் வித்யா வினோத், துபாயை தலைமை இடமாக கொண்ட ஸ்டடி வேர்ல்டு எஜுகேசன் ஹோல்டின் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்.

இவருடைய கணவர் வினோத் நீலகண்டம் அதன் தாளாளராகவும், மூத்த சகோதரர் கார்த்திகேயன், நிர்வாக அறங்காவலராகவும், இளைய சகோதரர் ஜெயகிருஷ்ணன் செயலாளராகவும் உள்ளனர்.

டாக்டர் வித்யா வினோத் இந்தியாவின் 8-வது இடம் பிடித்த பெண் சுய தொழில்முனைவோர் ஆவார். தகவல் கோட்டக் வெல்த் மற்றும் ஹூரான் இந்தியா என்ற அமைப்பு தயாரித்த பட்டியலில் உள்ள 100 பணக்கார பெண்களில் 36 பேர் சுயமாக வளர்ந்த பணக்காரர்கள் என்றால் அது மிகையாகாது.

இந்த பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா முதலிடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.54 ஆயிரத்து 850 கோடி. ரூ.36 ஆயிரத்து 600 கோடி சொத்துகளுடன் பயோகான் நிறுவனத்தின் கிரண் மசும்தார் ஷா 2-வது இடத்தையும், மும்பையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான லீனா காந்தி திவாரி ரூ.21 ஆயிரத்து 340 கோடி சொத்துகளுடன் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.