Breaking News

இனி வாட்ஸ் ஆப் மூலம், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை செலுத்தலாம். ஒருவருக்கு ஒருவர், பணம் அனுப்பலாம்

இனி வாட்ஸ் ஆப் மூலம், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை செலுத்தலாம். ஒருவருக்கு ஒருவர், பணம் அனுப்பலாம்
அமெரிக்காவைச் சேர்ந்த, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம், நம் நாட்டில், பணப் பரிவர்த்தனை சேவையை துவக்கியுள்ளது.மொபைல் போன் வாயிலாக பேசவும், தகவல்கள், படங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளவும், 'வாட்ஸ் ஆப்' செயலி உதவுகிறது.

சோதனை

'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான வாட்ஸ் ஆப், இந்தியாவில், 2018 முதல், சோதனை அடிப்படையில், மொபைல் போன் வாயிலாக பணப் பரிவர்த்தனை சேவையை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், பொதுத் துறையைச் சேர்ந்த, என்.பி.சி.ஐ., நிறுவனம், யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பட்டு வாடா சேவையின் கீழ், வாட்ஸ் ஆப் நிறுவனம் நிதிச் சேவையில் களமிறங்க அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, மார்க் ஸூகர்பர்க் கூறியிருப்பதாவது:

இந்தியர்கள், இனி வாட்ஸ் ஆப் மூலம், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை செலுத்தலாம். ஒருவருக்கு ஒருவர், பணம் அனுப்பலாம். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. தனி நபர்களின் தகவல்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்புக்கு வலிமையான கட்டமைப்பை, வாட்ஸ் அப் ஏற்படுத்திஉள்ளது.

முதன் முறை

வங்கிக் கணக்கு மற்றும், 'டெபிட் கார்டு' உள்ளோர், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட, 10 மொழிகளில், பணப் பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம், தென் அமெரிக்காவைச் சேர்ந்த, பிரேசில் நாட்டில் முதன் முறையாக, வாட்ஸ் ஆப், பணப் பரிவர்த்தனை சேவை துவக்கப்பட்டது.

வாடிக்கையாளருக்கு கட்டுப்பாடு

இந்தியாவில், 40 கோடி பேர், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துகின்றனர். எனினும், பணப் பரிவர்த்தனை சேவையை, முதற்கட்டமாக, இரண்டு கோடி பேருக்கு மட்டுமே வழங்க, என்.பி.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில், மொபைல் போன் வாயிலான பணப் பரிவர்த்தனை சேவையில், வால்மார்ட்டின், 'போன் பே' நிறுவனம், 25 கோடி பேருடன் முதலிடத்தில் உள்ளது. 'கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம்' நிறுவனங்களும் மொபைல்போன் வாயிலான பணப் பரிவர்த்தனை சேவையை வழங்கி வருகின்றன.