கணினி மற்றும் மொபைல் பயன்படுத்துவோருக்கு கண்களைப் பாதுகாக்கும் 6 எளிய பயிற்சிகள்
கணினி மற்றும் மொபைல் பயன்படுத்துவோருக்கு கண்களைப் பாதுகாக்கும் 6 எளிய
பயிற்சிகள்
முந்தைய காலத்தில் 50களுக்கு மேற்பட்ட வயதினரும், ஸ்டைலுக்காகவும் கண்ணாடி
அணிவார்கள். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியாலும், மாறிவரும்
உணவுப்பழக்கவழக்கத்தாலும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட கண் பார்வைக்காக
கண்ணாடி அணியும் சூழல் வந்துவிட்டது.
கண் பார்வைக்கு ஆரோக்கியமான உணவு மிகமிக அவசியம். துரித, பொருந்தா உணவுகளைத்
தவிர்த்து கண் பார்வையை மேம்படுத்தக்கூடிய வைட்டமின் ஏ அடங்கிய உணவுகளை
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
அதேபோன்று கணினியைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் பலரும் இன்று கண் எரிச்சல், கண்
பார்வை குறைவு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அலுவலகத்தில்
பல மணி நேரம் தொடர்ந்து கணினி பார்ப்பது, பின்னர் வீட்டிற்குச் சென்றும் மொபைல்
போன் பயன்படுவது கண் பிரச்னைகளுக்கு எளிதில் வழிவகுக்கும்.
கணினி, மொபைல் போன் பயன்படுத்துவோர் சில எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் கண்
பார்வை பிரச்னைகளைத் தடுக்கலாம்.
► இரு உள்ளங்கைகளைக் கொண்டு நன்றாக தேய்த்து அதில் உருவாகும் சூட்டை உங்கள்
கண்களின் மேல் வைக்கவும். கண்ணிற்கு லேசான சூடு சென்றவுடன் சில நொடிகளை கண்களை
மூடியிருந்து பின்னர் திறக்கவும்.
► வேலை செய்யும்போது அதிக ஈடுபாட்டினால் பெரும்பாலானோர் கண்களை இமைப்பதில்லை. இது
கண்களில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும். எனவே கண்களை இமைக்க வேண்டிய நேரத்தில்
இமைக்க வேண்டும்.
► கருவிழியை மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக சுழற்ற வேண்டும். உங்கள் கண்
இமைகளை மூடிவிட்டு, கண்களை வட்ட இயக்கங்களில் சுற்றவும். இது உங்கள் கண்களுக்கு
மசாஜ் அளிப்பது போன்றது. கண்களைச் சுற்றி காணப்படும் தசைகளை புத்துணர்ச்சி பெற
வைக்கிறது.
► தூர இடைவெளியில் பொருள்களை பார்த்தல். அறையில் தூரத்தில் உள்ள ஒரு பொருள்
உங்களை நோக்கி வருவதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த பொருளை நோக்கி உங்கள் கண்கள்
செல்லட்டும். அருகிலிருந்து தூரம் வரை கண்கள் செல்ல வேண்டும். இந்த நேரத்தில்
கண்கள் நிலையான இயக்கத்தில் இருக்க வேண்டும்.
► கணினி திரையைத் தாண்டி அறையில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை உற்றுநோக்க வேண்டும்.
இந்த உற்றுநோக்கும் பயிற்சி கண் பார்வைக்கு நல்ல பலனைத் தரும்.
► ஒரு பொருள் ஜூம் ஆவது போல நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு புள்ளியில்
ஆரம்பித்து கண்கள் சுற்றிலும் விரிய வேண்டும்.
இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம்.