Breaking News

எலும்புகளை பலப்படுத்தும் ’கொய்யா’

எலும்புகளை பலப்படுத்தும் ’கொய்யா’
வாழைப்பழம் போலவே ஏழை மக்கள் அதிகளவில் சாப்பிடும் பழங்களில் கொய்யாவுக்கும் இடமுண்டு. ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் இப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மக்னீஷியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன. எலும்புகள், பற்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் கொய்யாவைக் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்றது.

மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் நாடுகளைச் சேர்ந்த கொய்யா, தற்போது இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இப்பழத்தின் உட்பகுதி விதைகள் நிறைந்ததாகவும் சிவப்பு, வெள்ளை மற்றும் பிங்க் நிறத்தில் பொதுவாகக் காணப்படுகிறது. இப்பழத்தைச் சாப்பிடும்போது தோலை நீக்கக் கூடாது. ஏனென்றால், இப்பகுதியில் வைட்டமின் சி அதிகமாக அடங்கியுள்ளது. இவை பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்சனைகளைக் குணமாக்குகிறது.

கொய்யா ஒரு சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இதனைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் பெறலாம். கொய்யாவைக் கனியாக மட்டுமல்லாமல் காயாகவும் கூடச் சாப்பிடலாம். இது வயிற்றுக் கடுப்பைத் தீர்க்க வல்லது. வயிற்றுப் புண், வாயில் ஒருவித எரிச்சல் போன்றவற்றையும் இது குணமாக்கும்.

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு கசாயம் செய்யலாம். இதனைக் கொண்டு வாய் கொப்பளித்தால் ஈறுகளில் இருக்கும் வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்தைச் சரி செய்ய, இந்த இலைகளை அரைத்துத் தேய்க்கலாம். கொய்யா மரத்தின் பட்டைகள் மற்றும் வேர் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் சிறு குழந்தைகளின் வயிற்றுப்போக்கைத் தடுத்து நிறுத்தும்.

நோய்களைத் தடுக்கும் ஆற்றல்!

கொய்யாவில் இருக்கும் வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்குகிறது. ஆரஞ்சு பழத்தில் இருப்பதைவிட கொய்யாவின் நான்கு மடங்கு வைட்டமின் சி அடங்கியுள்ளது. இதில் இருக்கும் லைக்கோபீன், க்வெர்செடின் ஆகியன சிறந்த ஆகிசிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. இதனால் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. கொய்யா சாப்பிடுவதால் புரோஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிவது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அடங்கியுள்ள சோடியம், பொட்டாசியம் அளவின் காரணமாக ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இதய நோயை உண்டாக்கும் டிரை கிளிசராய்டுகள், கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது. நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. கொய்யாவில் அடங்கியுள்ள அதிக நார்ச்சத்து, சர்க்கரை நோயாளிகளின் உடலில் திடீரென்று சர்க்கரை உயர்வதை ஒழுங்குபடுத்துகிறது. இந்த நார்ச்சத்து தான் உடலில் மலம் சிக்கலின்றி வெளியேற உதவுகிறது.

கொய்யாவில் இருக்கும் வைட்டமின் ஏ கண் புரை உள்ளிட்ட பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது.

கர்ப்பிணிகளுக்கு ஊட்டம் தரும்!

வைட்டமின் பி9 அல்லது போலிக் அமிலம், கர்ப்பிணிப் பெண்களுக்கு மாத்திரை வடிவில் வழங்கப்படுகிறது. அதற்குப் பதிலாக கொய்யா சாப்பிடும்போது, வயிற்றில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலம் கோளாறுகளில் இருந்து காக்கப்படுகிறது.

இதில் அடங்கியுள்ள மக்னீஷியம் உடல் தசைகள், நரம்பு மண்டலத்தை ஓய்வடையச் செய்கிறது. கடினமான வேலை அல்லது நாள் முழுக்க ஓய்வின்றி உழைத்துவிட்டு வீடு திரும்புபவர்கள் இதனைச் சாப்பிட்டால் போதும். மன அழுத்தம் நீங்கி உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.