Breaking News

பள்ளி, கல்லூரி திறக்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பள்ளி, கல்லூரி திறக்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
     வரும், 15ல் இருந்து, சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. கொரோனா ஊரடங்கின், ஐந்தாம் கட்ட தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.இதில், பல்வேறு துறைகளில் தளர்வுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. 

  இவை, இம்மாதம், 15 முதல் நடைமுறைக்கு வருகின்றன. அப்போது பின்பற்றப்பட வேண்டிய, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன் விபரம்:வரும், 15ம் தேதி முதல், தனிக் கட்டடங்களில் இயங்கும் சினிமா அரங்குகள், 'மல்டிப்ளக்ஸ்' திரை அரங்குகள், 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க, அனுமதி அளிக்கப்படுகிறது.  'பி டு பி' எனப்படும், வர்த்தகர்களுக்காக வர்த்த கர்களால் நடத்தப்படும் கண்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.நீச்சல் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு மட்டும், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படும். இவை அனைத்துக்குமான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் விரைவில் வெளியிடும்.

      பள்ளி -- கல்லுாரிகள் வரும், 15க்கு பின் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அது குறித்து, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். பள்ளிகள் திறந்தாலும், நேரில் வர அச்சப்படும் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் தொடர வேண்டும்.  பள்ளிக்கு நேரில் வர விரும்பும் மாணவர்கள், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும். பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் திறப்பு தொடர்பான, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை, அந்தந்த மாநில அரசுகள் தயார் செய்ய வேண்டும்.

    கல்லுாரி மற்றும் உயர் கல்வி நிலையங்கள், இயங்கும் நேரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துடன், கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சகம் கலந்தாலோசித்து முடிவெடுத்து கொள்ளலாம். இங்கும், ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும்.உயர் கல்வித்துறையில், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆய்வக கல்வி தேவைப்படும் அறிவியல் மாணவர்களுக்கு மட்டும், வரும், 15 முதல் அனுமதி அளிக்கப்படும்.பொது, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், ஆன்மிகம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில், 100 பேர் வரை பங்கேற்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

     இந்த எண்ணிக்கையை, 15க்கு பின் அதிகரிப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள, அதிகாரம் அளிக்கப்படுகிறது.இந்த உத்தரவுகள் அனைத்துமே, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.