Breaking News

10,11,12-ஆம் வகுப்பு வரை முதற்கட்டமாக பள்ளிகளை திறக்கலாம் மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து

10,11,12-ஆம் வகுப்பு வரை முதற்கட்டமாக பள்ளிகளை திறக்கலாம் - மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து
10, 11, 12-ஆம் வகுப்பு வரை முதற்கட்டமாக பள்ளிகளை திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  கொரோனோ பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் 80 சதவிகித தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது இருப்பினும் இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் கல்லூரிகளை திறக்க அனுமதி கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிகளுக்கு வரலாம் என்று அரசு அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாக கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11 ,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்கின்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இதுகுறித்து பெற்றோர் மாணவர்களிடம் கேட்டபோது உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஆன்லைன் முறையில் தொடர்ந்து கற்பித்தல் பணிகள் நடைபெற்றாலும் முழுமையாக அதில் கவனம் செலுத்த இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு பள்ளிகளை திறந்தால் செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் கூறுகின்றனர்.