பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு தமிழ் வினாத்தாளால் அதிர்ச்சி
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு தமிழ் வினாத்தாளால் அதிர்ச்சி
தமிழகத்தில் நடந்த பத்தாம் வகுப்பு தமிழ் துணைத் தேர்வில்
'தமிழ் -முதல் தாள்' என குறிப்பிட்டு வினாத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள்
அதிர்ச்சியடைந்தனர். இந்தாண்டு நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா
பாதிப்பால் ரத்து செய்யப் பட்டு அனைவருக்கும் தேர்ச்சி (ஆல் பாஸ்)வழங்கப்பட்டது.
இதற்கிடையே பொது தேர்வின் போது தனித்தேர்வர்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கும், 'ஆல்பாஸ்' முறையில் மதிப்பெண்ணில்
குறையுள்ள மாணவர்களுக்கும் செப்.,21 - 26 வரை துணைத் தேர்வுகள் நடக்கின்றன.
செப்.,21ல் நடந்த தமிழ் தேர்வில் 'தமிழ் -முதல் தாள்' என்ற பெயரில்
13 பக்கம் கொண்ட வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதை பார்த்து 'தமிழ் -
இரண்டாம் தாள் தேர்வு உள்ளதா' என அதிர்ச்சியடைந்தனர். புதிய
பாடத்திட்டத்தின்படி தமிழ் தேர்வை ஒரே தாளாக நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. தேர்வுத்துறையின் கவனக்குறைவால் மாணவர்கள் குழப்பம்
அடைந்தனர். கல்வி அதிகாரிகள் கூறுகையில் " தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம் தேர்வுகளில் இரண்டாம் தாள் தேர்வுஇல்லை. மாணவர்கள் குழப்பமடைய
வேண்டாம்" என்றனர்.