Breaking News

Shareit-ஐ விட வேகமாக இயங்கும் புதிய செயலி: இந்திய இளைஞரின் கண்டுபிடிப்பு

Shareit-ஐ விட வேகமாக இயங்கும் புதிய செயலி: இந்திய இளைஞரின் கண்டுபிடிப்பு
சீன நிறுவனத்தின் Shareit செயலியை விட வேகமாக இயங்கும் 'File Share Tool' என்ற செயலியை ஜம்மு காஷ்மீர் இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

கல்வான் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு பொருட்களை புறக்கணிப்போம் என்ற குரல் வலுக்க ஆரம்பித்தது. இதனையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செயலிகளை தடை செய்வதாக விளக்கம் அளித்திருந்தது.

தடை செய்யப்பட்ட செயலிகளில் Shareit-ம் ஒன்று. ஒரு செல்போனில் இருந்து மற்றொரு போனுக்கு புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவைகளை வேகமாக பகிர்வதற்கு இந்த செயலி பயன்பட்டது. இந்தியாவில் இதனை ஏராளமானோர் பயன்படுத்தினர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த திப்பு சுல்தான் வானி என்ற இளைஞர் புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுவும் Shareit போல் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு செயலிதான். ஆனால் இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது Shareit ஐ விட அதிக வேகம் கொண்டது. ஒரு நிமிடத்திற்கு 40 MB வேகத்தில் இதில் கோப்புகளை பகிர முடியும். இந்த செயலிக்கு 'File Share Tool' என பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள அந்த இளைஞர், தனது செயலிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும் என கூறியுள்ளார். அதேபோல் தடை செய்யப்பட்ட சீன செயலிகளுக்கு பதிலாக இந்திய செயலிகளை உருவாக்குவதில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், படிப்படியாக ஒவ்வொரு செயலியாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.