புதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் மாநாடு பிரதமர் மோடி நாளை உரை
புதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் மாநாடு பிரதமர் மோடி நாளை உரை
இந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
இதில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, உயர் கல்வியைப் பொருத்தவரை 2018-ம் ஆண்டில் 26.3 சதவிகிதமாக இருந்த உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 2030-ம் ஆண்டில் 50 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் எனும் இலக்கை புதிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிப்பது, அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதி, தன்னாட்சி அதிகாரங்கள் உள்ளிட்டவை குறித்து புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். மாநாட்டில் உயர்கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.