செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான மையங்கள் இணையதளத்தில் வெளியீடு
செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான மையங்கள் இணையதளத்தில் வெளியீடு
நீட் தேர்வு நடப்பது உறுதியாகி விட்ட நிலையில், இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், தேர்வு நடத்தப்படும் மையங்கள் பற்றிய விவரங்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் நடத்தப்படும் பொதுத் தகுதி தேர்வை, கடந்தாண்டு வரை சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. இந்தாண்டு முதல் முறையாக, இதற்காக ‘தேசிய தேர்வு முகமை’ என்ற தனி அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக இந்தாண்டுக்கான நீட் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.
இத்தேர்வை நடத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனால், நீட் தேர்வு தள்ளி வைக்கப்படுமா? ரத்தாகுமா? ஆன்லைன் மூலம் நடக்குமா? என்று பல்வேறு யூகங்கள் உலா வந்த நிலையில், இத்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள், முன்கூட்டியே தங்களின் தேர்வு மையங்களை பற்றி அறிந்து கொள்வதற்கான வசதியை தேசிய தேர்வு முகமை செய்துள்ளது.
தேர்வு நடக்கும் மையங்களின் விவரங்களை அது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மையங்கள் மற்றும் இதர தகவல்களை, தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகியவற்றில் அறிந்து கொள்ளலாம். ேமலும், நீட் தேர்வுக்கான அடையாள அட்டையும் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வு முகமை கூறியுள்ளது.
பிற்பகலில் தேர்வு
வழக்கமாக, காலையில் தொடங்கி பிற்பகலில் நீட் தேர்வு முடியும். வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள், தேர்வு மையங்களை கண்டுபிடித்து வருவதில் பல சிரமங்கள் இருப்பதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு மையத்துக்குள் செல்ல முடியாமல், கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை தவிர்ப்பதற்காக, இம்முறை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
* நீட் தேர்வுக்காக மாணவர்களுக்குவழங்கப்படும் தேர்வு அடையாள அட்டையில் இடம்பெறும் விவரங்கள் வருமாறு
* மாணவரின் தேர்வு எண்
* தேர்வு மையத்தின் எண், முகவரி,
* கேள்வித்தாளின் மொழி,
* தேர்வு அறைக்குள் நுழைய வேண்டிய நேரம்
* தேர்வு மைய வாசல் மூடப்படும் நேரம்- போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.