Breaking News

10,11,12ம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் அரசு அறிவிப்பு

10,11,12ம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் அரசு அறிவிப்பு
12ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 26ம் தேதி வரை நடைபெறும்!

11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7- ஆம் தேதி வரை நடைபெறும்!

செப்.29 முதல் அக்.5 வரை 10ம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவிப்பு:

10,11,12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது
10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தவறிய பள்ளி மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''நடைபெறவுள்ள செப்டம்பர் 2020 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்வுகளுக்கு, மார்ச் 2020 பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களிடமிருந்தும், மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (புதிய மற்றும் பழைய பாடத்திட்டம்) செப்டம்பர் 2020 பருவத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வினை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

26.03.2020 அன்று நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட வேதியியல் , புவியியல் , கணக்குப் பதிவியல் (புதிய மற்றும் பழைய பாடத்திட்டம் ) மற்றும் தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் (பழைய பாடத்திட்டம்) பாடங்களுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வினை எழுத ஏற்கனவே விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் மட்டும் செப்டம்பர் 2020 பருவத்தில் நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வின்போது அப்பாடங்களுக்கான தேர்வுகளை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மேற்குறிப்பிட்ட தேர்வர்கள் வேதியியல் / புவியியல் / கணக்குப் பதிவியல் பாடம் தவிர வேறு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லையெனில் அப்பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் 24.08.2020 முதல் 27.08.2020 வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும். 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் (ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்றவர்கள்) 24.08.2020 முதல் 27.08.2020 வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.

மார்ச் 2020 பருவத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) / இரண்டாம் ஆண்டு (+2) தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதித் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிகள் / தனித்தேர்வர்கள் மார்ச் 2020 பருவத் தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாக 24.08.2020 முதல் 27.08.2020 வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே மேல்நிலை முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் செப்டம்பர் 2020 பருவத்தில் நடைபெறும் மேல்நிலை பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுத செப்டம்பர் 2020 பருவம் மட்டுமே இறுதி வாய்ப்பாகும்.

ஓராண்டிற்கு முன்னர் நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாமாண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள்

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள்ஆகியவற்றை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்புத் தேர்வுக் கட்டணம்:- 1. தேர்வுக் கட்டணம் ரூ.125/- 2. ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50/- மொத்தக் கட்டணம் ரூ.175/-

தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:- தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50/- சேர்த்து மொத்தம் ரூ. 175/-ஐ ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள்/தேர்வு மையங்களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

சிறப்பு அனுமதித் திட்டம் 24.08.2020 முதல் 27.08.2020 வரையிலான தேதிகளில் செப்டம்பர் 2020 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 28.08.2020 மற்றும் 29.08.2020 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். (பத்தாம் வகுப்புத் தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.500/- மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/-)

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம் :- ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும், இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.