பிளஸ் 1 மறு கூட்டலுக்கு நாளை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 மறு கூட்டலுக்கு நாளை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பிளஸ்1 பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்கள் மற்றும் பிளஸ் 2 மறுதேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 31 ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறு கூட்டலுக்கு நாளை 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதேபோல், பிளஸ் 2 மறுதேர்வு எழுதிய தேர்வர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க கூடாது.
விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.விடைத்தாளின் நகல் பெற பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ. 275 கட்டணம் செலுத்த வேண்டும்.மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ. 305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியில் பணமாக செலுத்த வேண்டும். நாளை 5 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.