Breaking News

நீட் தேர்வு பற்றி அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடி அறிவிப்பு

நீட் தேர்வு பற்றி அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடி அறிவிப்பு
நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கல்வித்துறையில் திட்டங்களை செயல்படுத்தும் முன், கல்வியாளர்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்டுதான் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக முன்கூட்டியே பலர் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். நடவடிக்கைகள் குறித்து பின்னர் கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

இந்தியாவில், தமிழகத்தில்தான் மாணவர்களுக்கு மடிக் கணினி அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எளிதாக பயிற்சி பெற முடியும். நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. இருப்பினும், இந்த ஆண்டு நீட்தேர்வுக்கு மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 6,010 பள்ளிகளில் கணினி வசதியும், 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டி.வி சேனல்கள் மூலம்தான் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. இதை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடைசி தேர்வு எழுதாதவர்கள் தேர்வு எழுத தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளில் ஹால்டிக்கெட் வாங்க வரும்போது, முகக்கவசம் வழங்கப்படும், என்றார்.