அட்மிஷன் காலகட்டத்தில் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என்பதற்கான ஆலோசனைகள்
அட்மிஷன் காலகட்டத்தில் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என்பதற்கான ஆலோசனைகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, பொறியியல் கல்லூரியில் அட்மிஷன் போடும் வரை மாணவர்களின் தவிப்பு அடங்குவதில்லை. அவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய காலகட்டமாக அந்த 2 மாதங்கள் உள்ளன. இந்த முக்கியமான காலகட்டத்தில் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறோம்.
மாணவர்களே! உங்களை சுற்றியுள்ள பலபேர் பொறியியல் படிப்பார்கள் அல்லது பொறியியல் படிக்க விரும்புவார்கள். அதனால் நீங்களும் அவசியம் பொறியியல் படிக்க வேண்டும், அதை படித்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற தவறான நினைப்பைக் கைவிட வேண்டும். உங்களின் சுயதிறமை பொறியியல் சார்ந்ததா? மற்றும் உண்மையிலேயே உங்களுக்கு அந்த துறையில் ஆர்வம் உள்ளதா என்பதை நீங்கள் நன்கு ஆய்வுசெய்ய வேண்டும். பொறியியல் உங்களுக்கு ஏற்ற துறை என்று நீங்கள் உண்மையாகவே உணர்ந்தால், மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.
நீங்கள் மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிகல், ஐ.டி. போன்ற பிரிவுகளில் எதை வேண்டுமானாலும் விரும்பலாம் மற்றும் படிக்க நினைக்கலாம். ஆனால் எந்த ஒரு படிப்பையும் தேர்வு செய்வதற்கு முன்பாக, அதைப்பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். அந்த படிப்பின் தன்மை என்ன? அதன் உட்கூறுகள் என்ன? எதிர்கால வாய்ப்புகள் என்ன? போன்ற சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டால்தான், பாடங்களை ஆர்வத்துடனும், எளிதாகவும் எதிர்கொண்டு படிக்க முடியும்.
கவுன்சிலிங் வரும்போது, பதட்டத்துடனும், டென்ஷனுடனும் இருக்கக்கூடாது. அந்த மனநிலை உங்களின் முடிவெடுக்கும் திறனையே பாதித்துவிடும். வீட்டிலேயே தெளிவான முடிவு எடுத்துக்கொண்டு, குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பாகவே கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு வந்துவிடவும்.
கவுன்சிலிங் ஹாலுக்குள், ஆபரேட்டர்களிடம் எந்த விவரங்களையும் கேட்கக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு எதுவும் தெரியாது. டிஸ்ப்ளே ஹாலிலும், யாரிடமும் தேவையின்றி பேசி, குழப்பிக்கொள்ளக்கூடாது.
நீங்கள் பணம் கட்டியவுடன், உங்களின் எண், சிஸ்டத்தில் பதிவாகிவிடும். எனவே பணம் கட்டியபிறகு நீங்கள் டிஸ்ப்ளே ஹால் செல்லக்கூடாது. ஏனெனில் உங்களின் பெயரை எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவார்கள். எனவே அந்த ஹாலில் இருந்தால் உங்களுக்கு கேட்காமல் போய், உங்களின் வாய்ப்பும் பறிபோய்விடும்.
எந்த பாடப்பிரிவை எடுக்கலாம், எந்தக் கல்லூரியில் படிக்கலாம் போன்ற முக்கியமான விஷயங்களை உங்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்தே முடிவு செய்யுங்கள். வெளியாட்கள் சொல்வதை சிறிய ஆலோசனையாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். விரிவான விவரம் தெரிந்த உங்களின் பள்ளி ஆசிரியர்களிடமோ அல்லது பெயர்பெற்ற கல்வி ஆலோசகர்களிடமோ விரிவான ஆலோசனைகளை கேட்கலாம். ஆனால் முடிவு மட்டும் குடும்பத்தோடு இணைந்துதான் எடுக்க வேண்டும்.
இளநிலையில் எதுபோன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் முதுநிலையில் எதுபோன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தெளிவு மாணவர்களிடம் இருக்க வேண்டும். அதுகுறித்து தகுதியான நபர்களிடம் முறையான ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
உங்களுக்கு ஏரோநாட்டிகல் துறையில் சிறப்பு ஆர்வம் இருந்தால், அந்த பிரிவை இளநிலை பொறியியல் படிப்பில் தேர்ந்தெடுப்பதைவிட, இளநிலையில், மெக்கானிக்கல் பொறியியல் முடித்துவிட்டு, முதுநிலையில் ஏரோநாட்டிகல் பாடத்தை தேர்ந்தெடுத்துப் படிப்பது நல்லது. எனவே இதுபோன்ற பல நுணுக்கமான அம்சங்களை மாணவர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
மேலும், நாம் எடுத்துப் படிக்கப்போகும் ஒரு பாடப்பிரிவை பற்றி மட்டுமே தெரிந்துவைத்திருந்தால் போதாது. பொறியியல் துறையில் இருக்கும் பலவித பிரிவுகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தால்தான், எதிர்கால சவால்களை எளிதாக சந்திக்க முடியும்.
உங்களின் நெருங்கிய நண்பர் ஒரு பாடத்தை அல்லது ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்கிறார் என்பதற்காக, நீங்களும் அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக அதையே பின்பற்றக்கூடாது. நண்பரின் மதிப்பெண், அவரின் ஆர்வம், பொருளாதார நிலைமை, குடும்ப சூழல் போன்ற பல அம்சங்களை முன்னிட்டு அவர் ஒரு கல்லூரி மற்றும் பாடத்தை தேர்வு செய்திருப்பார். அதுபோல, நீங்கள் உங்களின் சொந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான் முடிவெடுக்க வேண்டும். நட்பை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தொடரலாம்.
நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்து, ஒரு பெயர்பெற்ற கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். புகழ்வாய்ந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டால் மட்டுமே, உங்களின் சிறப்பான எதிர்காலம் நிச்சயிக்கப்பட்டு விடாது. கஷ்டப்பட்டு படித்து, திறமைகளை வளர்த்து, அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே நினைத்தது நடக்கும்.
நீங்கள் விரும்பிய கல்லூரி கிடைத்தால், விரும்பிய பாடம் கிடைக்காமல் போகலாம். விரும்பிய பாடம் கிடைத்தால் விரும்பிய கல்லூரி கிடைக்காமல் போகலாம். எனவே, அதை நினைத்துக் கவலைப்படாமல், கிடைத்ததை விரும்பி சந்தோஷமாக படியுங்கள். விரும்பிய பாடத்தைவிட, சிறந்த கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அப்போதுதான் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும்.
ஒரு கல்லூரி சிறந்த கல்லூரியா என்பதை சரியாக அறிந்துகொள்ள, ஒரு சாதாரண கல்வி ஆலோசனை மையத்தையோ(consultancy), சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தையோ அணுகக்கூடாது. அக்கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள் அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் விசாரிக்க வேண்டும். அவர்கள்தான் அக்கல்லூரி தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளிப்படையாகவும், விரிவாகவும் கூறுவார்கள். அக்கல்லூரியில் பணிபுரியும் ஒரு ஆசிரியரோ அல்லது அலுவலக ஊழியரோ, உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக, உங்களின் நலம் விரும்பியாக இருந்தால் அவர்களிடமும் கேட்கலாம்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில்தான் சிறந்த கல்லூரிகள் இருக்கும். பெரிய நகரங்களில்தான் பல வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நினைப்பது சரியல்ல. சிறப்பான, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட, தரமான ஆசிரியர்களைக் கொண்ட புகழ்வாய்ந்த பல கல்லூரிகள் சிறிய நகரங்களிலும் உள்ளன என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெரிய நகரங்களில் எவ்வளவோ தரமற்ற கல்லூரிகள் உள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பள்ளி படிப்பிற்கும், பொறியியல் படிப்பிற்கும் சில வித்தியாசங்கள் உண்டு. பள்ளியில் கணிதப் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள், பொறியியல் படிக்கும்போது தடுமாறுவார்கள். சில தேர்வுகளில் கணிதப் பாடத்தில் தோல்வியும் அடைவார்கள். எனவே கடும் முயற்சி எடுத்துப் படிக்க வேண்டும்.
அசட்டையாக இருக்கக்கூடாது. விளையாட்டு மற்றும் நண்பர்கள் என்பதை, ஒரு அளவுடன் வைத்துக்கொண்டு, படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், உங்களின் பெற்றோர்கள் செலவழிக்கும் பணத்திற்கும், நீங்கள் செலவழிக்கும் காலத்திற்கும் ஒரு நல்ல அர்த்தம் கிடைக்கும்.
ஆதாரம் : தினமலர் கல்விமலர்