அரசு பள்ளிகளில் கலைஞர் டிவி கொடுக்குறாங்க!!
அரசு பள்ளிகளில் கலைஞர் டிவி கொடுக்குறாங்க!!
திருச்சி மாவட்ட அரசு பள்ளிகளுக்கு திடீரென, 'கலைஞர் டிவி'க்கள் வழங்கப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், 2006 - 11ல், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பொது மக்கள் அனைவருக்கும் இலவச கலர், 'டிவி'க்கள் வழங்கப்பட்டன. இந்த, 'டிவி'க்கள் தரம் இல்லாமல், சில ஆண்டுகளில் பழுதடைந்தன.இலவச கலர், 'டிவி' வழங்கும் திட்டத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படாமல், அந்தந்த மாவட்டங்களில் உள்ள குடோன்களில் பல ஆயிரம், 'டிவி'க்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள குடோன்களில் பாதுகாக்கப்பட்ட, கலைஞர், 'டிவி'க்கள், இரண்டு நாட்களாக, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன.அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் கலைஞர், 'டிவி'க்களை பெற்றுச் சென்றனர். கல்வித்துறை வட்டாரத்தில் கேட்டபோது, 'வீணாக போகக் கூடாது என்ற நோக்கத்தில், வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.
தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், 'இப்போ எதற்கு, 'டிவி' கொடுக்குறாங்கன்னு தெரியலை.எல்லாம் ஓட்டை, உடைசலா இருக்கு. இவை ஒர்க் ஆகுமா என, தெரியவில்லை' என்றனர்.தி.மு.க., ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட, 'டிவி'க்களை, கிட்டத்தட்ட, 10 ஆண்டுகள் சும்மா வைத்திருந்து, தற்போது வழங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.