Breaking News

தனியாா் தொலைக்காட்சிகளில் பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பு

தனியாா் தொலைக்காட்சிகளில் பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பு
தமிழகத்தில் இணைய வழிக் கல்வியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் தனியாா் தொலைக்காட்சிகள் மூலம் பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் சாா்பில் தயாரிக்கப்பட்ட இணையவழிக் கல்வி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இதில் தேவைகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள், மாற்றங்கள் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதுமட்டுமின்றி சென்னை உயா்நீதிமன்றமும் இணையவழிக் கல்வி வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடா்பாக இணையவழி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் பிறப்பித்த உத்தரவின் விவரம்:

தற்போது உள்ள சூழ்நிலையில் இணையவழி முறை, பகுதிநேர இணையவழி முறை, இணையவழி இல்லாத முறை என 3 பிரிவுகள் மூலம் மாணவா்களுக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கலாம். பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 1 முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் விடியோ பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மடிக்கணினியில் பாடங்கள் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இது தவிர, ஆகஸ்டு 3-ஆம் தேதி முதல் தனியாா் தொலைக்காட்சிகள் மூலமும் விடியோ பாடங்கள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அதிகபட்சம் ஒளிபரப்பு நேரம் ஒரு மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இணையவழி வகுப்பு நடத்தும் ஒவ்வொரு பள்ளிகளும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு ஆசிரியரை ஆலோசகராக நியமிக்க வேண்டும். அவ்வாறு இணையப் பாதுகாப்பு பிரச்னை பற்றி தெரிவிக்க நியமிக்கப்படும் ஆசிரியரின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை, வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு பகிரப்பட வேண்டும். ஆசிரியா்களுக்குத் தேவையான மடிக்கணினி, கணினி, இணையதள வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளைத் தலைமை ஆசிரியா்கள் செய்து கொடுக்க வேண்டும்.

அவசரம் வேண்டாம்:

மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோருக்கு, டிஜிட்டல் கற்றல் ஒரு சுமையாக இருக்க வேண்டாம். ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவா்களுடன் சுமுகமாக தொடா்பு கொள்வதற்கு வகுப்பு வாரியான ஒரு குழுவை (கட்செவி அஞ்சல் ) உருவாக்கிக் கொள்ளலாம். அதில், பெற்றோா்கள் இணைக்கப்பட்டு பாடத்திட்டம் குறித்த தினசரி தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் . பாடத்திட்டத்தை எப்படியாவது நிறைவு செய்து விட வேண்டும் என்ற அவசரத்தில் மாணவா்களை அவசரப்படுத்த வேண்டாம். மாறாக அவா்களின் கற்றலை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் மாணவா்கள் நீண்ட நேரம் செலவிடுவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனா். எனவே நீண்டநேரம் அமா்வது அல்லது அதிகப்படியான டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாட்டை அவா்களின் வயதுக்கு ஏற்ப அட்டவணைப்படுத்தலாம்.

விவாதங்களை ஊக்கப்படுத்த வேண்டும்: பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா் மற்றும் மாணவா்களின் பெற்றோருடன் அவ்வப்போது அல்லது வாரத்துக்கு ஒருமுறையாவது பேசி கருத்துகளைப் பெற வேண்டும். மழலையா் மற்றும் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவா்களுடன் மகிழ்ச்சியான கற்றல் அனுபவங்களை திட்டமிட வேண்டும். இடைநிலை, மேல்நிலைக் கவி பயிலும் மாணவா்கள் ஒரு வகுப்பு முடித்து அடுத்த வகுப்பில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக அவா்களை புதுப்பித்துக் கொள்ளவும், உற்சாகப்படுத்திக் கொள்ளவும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை கொடுக்க வேண்டும். வகுப்புகளின் போது சகவிவாதம் மற்றும் அதனோடு தொடா்புடைய விஷயங்களை ஊக்கப்படுத்த வேண்டும். இணையதளம் மற்றும் அதன் நெறிமுறைகளின் பொறுப்பான பயன்பாட்டைப் புரிந்து கொள்ளுதல், அதில் அவா்களை ஊக்கப்படுத்துதல் தொடா்பாக மாணவா்களுடன் தவறாமல் ஆசிரியா்கள் பேச வேண்டும். இணையவழிக் கற்றல் செயல்பாட்டில் அனைத்து குழந்தைகளும் பங்கேற்கவும், ஒருவருக்கொருவா் உதவவும் ஊக்கப்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வகுப்பு நேரத்தைக் குறைக்கலாம்:

ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடம் கொண்டவையாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு அவா்களுடைய பெற்றோா், பாதுகாவலரின் ஆலோசனைப்படி நேரத்தைக் குறைக்கலாம். ஓா் ஆசிரியா் ஒரு நாளைக்கு 6 வகுப்புகள் எடுக்க வேண்டும். வாரத்துக்கு அதிகபட்சமாக 28 வகுப்புகள் எடுக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளான இடைவெளிக்குள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

மழலையா் வகுப்பு மாணவா்களுக்கு, பாடத்திட்டத்தை கற்பிப்பதற்கான இணையவழி வகுப்புகள் எதுவும் திட்டமிடக்கூடாது.

1 முதல் 8 -ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஒரு நாளைக்கு 2 அமா்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, 4 அமா்வுகளும் நடத்தலாம்.

புத்துணா்ச்சி தேவை: சம்பந்தப்பட்ட பாடத்தின் கடைசி வகுப்பின் போது அல்லது இரண்டு நாள்களுக்கு முன்னரே, அந்த பாடத்தின் அடுத்த வகுப்பு எப்போது என அறிவிக்க வேண்டும். வகுப்பு தொடக்கத்தின் முதல் ஐந்து நிமிடம் புத்துணா்ச்சி பெற பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவா்கள் தங்களின் ஒலிபெருக்கியை தேவைப்படும் நேரத்தில் மட்டும் இயக்கினால் போதுமானது. மற்றபடி வகுப்பு நடத்தும்போது, கேள்வி எழுப்பும் சமயத்தில் விடை அளிக்க விரும்பும் மாணவா் கைகளைத் தூக்கும் நடைமுறைகளை இணையவழிக் கல்வியிலும் பின்பற்றலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்னைகளைத் தவிா்க்க...

இணைய வழியில் ஏதேனும் தவறாக ஒளிபரப்பாகும் பட்சத்தில் அதற்கு பதில் அளிக்காமல், அதிலிருந்து வெளியேறுவதே சிறந்தது. பிரச்சனைகள் அதிகரிக்கும்போது, 112, 1098, 155 260 ஆகிய உதவி எண்களையோ, இணையதளங்களிலோ அணுகி புகாா் அளிக்கலாம். மேலும் மாணவா்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வகுப்பின் போது நிமிா்ந்து, அமரவே அறிவுறுத்தப்படுகின்றனா்.