கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? அரசாணை வெளியீடு
கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? அரசாணை வெளியீடு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ததற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி புற மதிப்பீட்டில் 30 சதவீதம், அகமதிப்பீட்டில் 70 சதவீதம் எடுத்து தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது அந்த ஊரடங்கு 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இருப்பினும் அரசு தரப்பில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையே, மூடப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகளை நடத்துவது கடினம் என்பதால், அந்த தேர்வுகளை ரத்து செய்து அரசு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.
அப்போது தேர்ச்சி குறித்த கணக்கீடுகள் அரசாணையில் தெரிவிக்கப்படும் என்றும் அறிவித்தனர்.அது தொடர்பான அரசாணையை உயர்கல்வித்துறை நேற்று வெளியிட்டது. இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிமுறைகளின்படி பருவத் தேர்வு நடத்துவது தொடர்பாக வழிமுறைகளை வகுக்க உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருந்தது. அந்த குழுவின் பரிந்துரயைின் பேரில் தமிழகத்தில் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்து கடந்த 23ம் தேதி முதல்வர் அறிவித்தார்.
இதன்படி, கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்கள், முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், பிஇ, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், எம்இ முதல் ஆண்டு, எம்சிஏ, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்லஅனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படி இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில், கீழ் கண்ட வழிமுறகைளை பின்பற்றி மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.
* சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அக மதிப்பீ்டு அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீத மதிப்பெண்கள் கணக்கில்எடுத்து 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மைப் பாடங்களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
* துணைப்பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கு 100 சதவீத அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
* செயல்முறைத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தால், ஆய்வகப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
* மாணவர்கள் இதற்கு முந்தைய பருவத்தில்தேர்ச்சி பெறாமல் இருந்தால் அந்த தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்.
* தொலை தூரக் கல்வியை பொருத்தவரையில் மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படும்.
* தொலை தூரக் கல்வியில் எங்கெல்லாம் அக மதிப்பீடு இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
* இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்கு பெற்று அவர்களின் மதிப்பெண்களை உய்த்திக் கொள்ளலாம்.
* கொரோனா உள்ள கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளித்து அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.