பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது
தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய பாடத்திட்ட அடிப்படையில் முதல் முறையாக நடைபெற்றது. முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களின் வினாத்தாள் கடுமையாக இருந்ததாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
இதனால் இந்த பாடங்களில் இந்த ஆண்டு 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. இந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தை பொறுத்தவரை 170-க்கும் அதிகமாக கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். அதே சமயம் கட் ஆப் மதிப்பெண் 150-க்கும் குறைவாக பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
எனவே குறைந்த கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கட் ஆப் மதிப்பெண் 150-க்கு குறைவாக பெற்ற MBC, SC, ST, SCA மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள 25 முன்னனி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.
மேலும், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை காட்டிலும் சிபிஎஸ்சி மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு அதிகரித்துள்ள போதிலும், சிபிஎஸ்சிஇ மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், இருப்பினும் அதிகளவில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பொறியியல் இடம் கிடைக்கும் என்கிற கருத்தை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.