அரசு பள்ளி மாணவர்களுக்கு 278 மருத்துவ சீட் ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு 278 மருத்துவ சீட் ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், 278 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, 23 அரசு கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 3,250 இடங்கள் உள்ளன.மேலும், சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., பெருந்துறை, ஐ.ஆர்.டி., மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரிகளில், 350 இடங்கள் உள்ளன. இதன்படி, அரசிடம் மொத்தம், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.இந்த இடங்களில், அரசு பள்ளிகளில் படிக்கும், ஓரிரு மாணவர்கள் மட்டுமே சேரும் நிலை இருந்தது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர் களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிக்கும் வகையில், இடஒதுக்கீடு கொண்டு வர, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, தமிழக அமைச்சரவை, 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு, நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 270 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.மேலும், சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில் உள்ள, 100 பி.டி.எஸ்., எனும் பல் மருத்துவ படிப்பில், எட்டு இடங்கள், அரசு பள்ளி மாணவர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
இந்த எண்ணிக்கை, அடுத்தாண்டு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த கல்வியாண்டில், 11 மருத்துவ கல்லுாரிகள், புதிதாக துவக்கப்பட உள்ளன.இந்த மருத்துவ கல்லுாரிகளில், 1,650 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 124 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு, அரசு கல்லுாரிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது தனியார் மருத்துவ கல்லுாரிக்கும் பொருந்துமா என்பது, அரசிடம் ஆலோசித்த பின் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.