Breaking News

நீட் நுழைவுத் தேர்வை செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு மத்திய அரசு ஒத்திவைத்தது

நீட் நுழைவுத் தேர்வை செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு மத்திய அரசு ஒத்திவைத்தது.
நிகழாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வை செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு மத்திய அரசு ஒத்திவைத்தது. நிபுணா் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக ஜூலை 26-ஆம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும் நோய்த்தொற்றின் தீவிரம் தணியாததால், தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்று மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்கள் வலியுறுத்தி வந்தனா். இதனை கருத்தில் கொண்டு, தேர்வை நடத்த உகந்த சூழல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் நிபுணா் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வு செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால்

சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'மாணவா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வு செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெறும். ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பா் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடத்தப்படும். ஜேஇஇ முதுநிலை தேர்வு செப்டம்பா் 27-ஆம் நடைபெறும்' என்று தெரிவித்தாா்.