பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி..கல்வித்துறை தீவிர ஏற்பாடு
பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி..கல்வித்துறை தீவிர ஏற்பாடு
தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தலா ஒரு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.மேலும், மார்ச் 27 ல் துவங்கி ஏப்., 13ம் தேதி வரை நடைபெற இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வும் முழுமையாக ஒத்தி வைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 ஒரு பாடத் தேர்வும் ரத்து செய்வதாக முதல்வர் பழனிசாமி கடந்த 9ம் தேதி அறிவித்தார். மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.இதையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை தயாரிக்க, மாணவர்களின் வருகை பதிவேடு, விடைத்தாள், ரேங்கார்டு போன்றவற்றை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், 440 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன.
அதில், 18,341 மாணவர்கள், 17,205 மாணவிகள் என 35,546 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் கல்வி மாவட்டங்களில் அந்தந்த பகுதிளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, பள்ளி நிர்வாகங்கள் கடந்த 12ம் தேதி ஒப்படைத்தன. நேற்று முன்தினம் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள், ரேங்கார்டு ஆகியன ஒப்படைக்கப்பட்டன.அவற்றை மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான குழுவினர் சரிபார்த்து, பாட வாரியாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண் குறித்த விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்று முதல் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.கிரேடு அடிப்படையில்மதிப்பெண் பட்டியல் இதற்கிடையே மதிப்பெண் பட்டியலை கிரேடு அடிப்படையில் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'அரசு பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (இ.எம்.ஐ.எஸ்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.
அதே சமயத்தில் தனியார் பள்ளிகள் இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடிக்கின்றனவா என தெரியவில்லை. இதனால், மதிப்பெண்களை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின்போது விடுமுறை எடுத்தவர்கள், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வருகை பதிவேடு குறைவாக இருந்தால், அவர்களின் மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, 6 முதல் 8 ம் வகுப்பு வரை தற்போது நடைமுறையில் உள்ள கிரேடு அடிப்படையில் மதிப்பெண்ணை வழங்க வேண்டும். கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கினால் எவ்வித சிக்கல் இருக்காது' என்றார்.