எஸ்.ஐ பணிக்கு எழுத்து தேர்வில் தேறியவர்க்கு சான்றிதழ் சரிபார்ப்பு
எஸ்.ஐ பணிக்கு எழுத்து தேர்வில் தேறியவர்க்கு சான்றிதழ் சரிபார்ப்பு
எஸ்.ஐ., பணியிடங்களுக்கான, எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, திருச்சியில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறையில் காலியாக உள்ள, 969 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப,2019 மார்ச்சில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்பணிக்கு, காவல் துறையில் பணிபுரியும், இரண்டாம் நிலை; முதல் நிலை; தலைமை காவலர்கள் என, 17 ஆயிரத்து, 561 பேர், பொதுப்பிரிவில், ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 448 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கு, ஜனவரி, 12, 13ம் தேதிகளில், 32 மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மார்ச்சில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற, 5,275 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல்திறன் போட்டி தேர்வுகள் நடத்தி, இறுதி முடிவு அறிவித்து இருக்க வேண்டும்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அந்தப் பணிகள் நடைபெறாமல் இருந்தன.
இந்நிலையில், உடல் கூறு அளத்தல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வுகளை, திருச்சியில் நடத்தும்படி, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.இதற்கான சுற்றறிக்கையை, மத்திய மண்டல ஐ.ஜி.,க்கு, அவர் நேற்று அனுப்பியுள்ளார்.