ஜூலை 8ம்தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
ஜூலை 8ம்தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
சென்னை : கடந்த மார்ச் மாதம் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரம் பள்ளிகளில் படித்த பிளஸ்2 மாணவர்களுக்கான தேர்வு நடந்தது. மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மார்ச் 24ம் தேதியுடன் தேர்வு முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதால் 32 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாமல் போனது. இந்நிலையில் 32 ஆயிரம் மாணவர்கள் அல்ல, குறைந்தபட்சமாக 670 மாணவர்கள் மட்டுமே கடந்த மார்ச் 24ம் தேதி தேர்வு எழுத முடியாமல் போனது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.அதனால் இந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு இல்லை என்றும், அவர்கள் தனித் தேர்வர்களுடன் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்போது மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான ஆயத்தப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் நடந்தது. தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமியும் கலந்து கொண்டார்.பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜூலை 6ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்குள் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்துவிட்டால் 6ம் தேதி வெளியிடலாம். பணி முடியாத நிலையில் மேலும் இரண்டு நாள் அவகாசம் தேவைப்படும் என்று தேர்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனால் 8ம் தேதி வெளியிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து அளித்த பேட்டியில் ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.