Breaking News

கொரோனா வைரஸ் பிரச்னையால், அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை துவக்குவதில் சிக்கல்

     கொரோனா வைரஸ் பிரச்னையால், நாடு முழுதும் உள்ள பல்கலைகளில், திட்டமிட்டபடி, அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, மத்திய மனிதவள அமைச்சகம் சார்பில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருவதால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன.


    பள்ளிகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், திட்டமிட்டபடி, அடுத்த சில மாதங்களில் துவங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பல்கலை மானியக் குழு தலைவர், டி.பி.சிங் தலைமையில் குழு அமைத்துள்ளார்.இந்த குழு, அடுத்த கல்வி ஆண்டுக்கான அட்டவணையை மாற்றி அமைத்து, வகுப்புகள் துவங்குவதை தாமதிக்க முடியமா என்பது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது குறித்து மத்திய அமைச்சரும், பல்கலை துணைவேந்தர்களுடன்ஆலோசித்து வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


   மேலும், இணையம் வாயிலாக வகுப்புகள் நடத்துவது, தேர்வுகள் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள்குறித்து ஆய்வு செய்வதற்கு, மேலும் ஒரு குழுவை, மத்திய மனிதவள அமைச்சகம் அமைத்து உள்ளது.வெளிநாட்டு கல்வி கனவு தகர்ந்ததுநாடு முழுதும் உள்ள மாணவர்கள் பலர், ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரிட்டன், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, உயர் கல்வி படிப்பதற்கான நடவடிக்கைகளில், கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.


   இவர்களில் பலருக்கு, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் இருந்து, அழைப்புகள் வந்தன. இதையடுத்து, வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்வதற்கான முயற்சிகளில், இந்த மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, பல நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பல நாடுகள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன.


    இதனால், வெளிநாட்டு கல்வி கனவில் மிதந்து வந்த நம் மாணவர்கள் பலரின் ஆசை, நிராசையாகி உள்ளது. இதையடுத்து, வெளிநாட்டு கல்வி கனவை கைவிட்டு, நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகின்றனர். இதனால், தங்கள்வாழ்க்கையே முற்றிலும் மாறி விட்டதாக, பல மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.