Breaking News

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தலைமை ஆசிரியர் இரண்டாவது உயிரிழப்பு

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுரையைச் சேர்ந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் சிங்காரத்தோப்பு சேர்ந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் (51), தில்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.


   விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 67 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் 51 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று இரவு (03.04.2020) மூச்சுத் திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


   அவரது உடல் விராடிக்குப்பன் சாலையில் உள்ள இடுகாட்டில் வழக்கத்தை விட அதிக ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு புதைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் கரோனாவுக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.