Breaking News

பாடநூல்கள் அச்சிடும் பணி அடுத்தவாரம் தொடங்குகிறது, பணியாளர்களை பணிக்கு திரும்பச்சொல்லி உத்தரவு


     1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது. தேவைக்கேற்ப அச்சிடப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் அடுத்த கல்வியாண்டு வகுப்புக்கான பாடநூல்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.


   இதனால் அந்த பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.ஊரடங்கு அமலுக்கு முன்பு வரையில் பெரும்பாலான வகுப்புகளுக்கு புத்தகம் அச்சிடும் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் சிறிய அளவில் தான் பணிகள் மிச்சம் இருக்கிறது என்றும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில், அனைத்து பள்ளிகளுக்கும்புத்தகம் வழங்க வேண்டிய நிலை இருக்கிறது. அதில் எந்த தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு மிச்சம் இருக்கும் பணிகளை அடுத்த வாரத்தில் மீண்டும் தொடங்க இருப்பதாக பாடநூல் கழகம் தெரிவித்து இருக்கிறது. இதற்காக பணியாளர்களை பணிக்கு திரும்பச்சொல்லி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


     மேலும், கடந்த ஆண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் கிடைப்பதில் சில குளறுபடிகள் இருந்தது. ஆனால் இந்த முறை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் வகையில் பாடநூல் கழகம் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருவதாக பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தெரிவித்தார்.