Breaking News

தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு

    கரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் தகவல்களை ஒரே சமயத்தில் 5 பேருக்கு அனுப்ப முடியும். இனி, ஒரே சமயத்தில் அதனை ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா குறித்து போலி தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


    வாட்ஸ்அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் எந்த அளவுக்கு ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கிறதோ அதே அளவுக்கு வதந்திகளை நம்புவதற்கும் வழிவகுக்கிறது. வாட்ஸ்அப் வதந்தியால் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதை தடுக்கும்படி தக்க நடவடிக்கைகளை எடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்தை மத்திய அரசு ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்டு தகவல்களை சுட்டிக்காட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டது. எனினும் இது மத்தியரசிற்கு திருப்தி அளிக்கவில்லை. தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேம்படுத்தும் பணிகளை வாட்ஸ்அப் மேற்கொண்டு வந்தது.


    அதன்படி, ஒரு தகவலை 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாத வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்தது. இந்நிலையில் தற்போதைய கொரோனா காலத்தில் நிறைய சமூக வலைத்தளங்கள் மூலம் போலி தகவல்களும் பரவி வருகிறது. அதனால், வாட்ஸ்அப்பில் அதிகமுறை ஃபார்வேர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் ஒருவருக்கு மட்டுமே அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.