ஐந்து மாதங்களாக ஊதியமின்றி ஆசிரியர்கள் அவதி
ஐந்து மாதங்களாக ஊதியமின்றி ஆசிரியர்கள் அவதி
ஐந்து மாதங்களாக ஊதியமின்றி புதுச்சேரியிலுள்ள அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் தொடங்கி ஓய்வூதியர்கள் வரை சுமார் 800 பேரின் குடும்பத்தினர் பாதிப்பில் உள்ளனர். கல்வித்துறையிலுள்ள சில அதிகாரிகளே இந்த நிலைமைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
உலகம் முழுக்க கரோனா வைரஸ் தாக்கத்தால் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இந்தியாவில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களையும் தங்களது ஊழியர்களுக்கு தேவையான ஊதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தில் முன்தொகை தந்துள்ளனர்.
ஆனால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஓய்வூதியக்காரர்களுக்கும் ஓய்வூதியம் தரப்படவில்லை.
இது தொடர்பாக புதுவை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் கூட்டமைப்பு செயலர் மார்ட்டின் கென்னடி கூறுகையில், "அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகத்தினர் அரசுக்கு செலுத்த வேண்டிய டியூஷன் கட்டணத்துக்கான பணத்தை செலுத்துவதில் சிறு தாமதத்தைக் காரணம் காட்டி ஆசிரியர்கள், ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றை கடந்த 5 மாதங்களாக கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகின்றனர்.
மாணவர்களிடமிருந்து எந்த விதமான பணத்தையும் வசூல் செய்யாத ஏழை, எளிய, பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு கல்விச் சேவை செய்து வரும் பள்ளிகளும் டியூஷன் கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்றும் ஒரு சில கல்வித்துறை அதிகாரிகள் நியாயமில்லாமல் வற்புறுத்தினர்.
இதுபற்றி முதல்வர் நாராயணசாமி, கல்வித்துறை நிதியமைச்சர் கமலக்கண்ணனிடம் முறையீடு செய்தபோது அவர்களும் பணம் வசூல் செய்யாத பள்ளிகள் டியூஷன் கட்டணம் கட்ட வேண்டியதில்லை என்று அறிவுறுத்தினர். அதையும் புறக்கணித்து அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஐந்து மாதங்களாக ஊதியம், ஓய்வூதியம் தராமல் சில கல்வித்துறை அதிகாரிகள் தடங்கல் ஏற்படுத்தியுள்ளனர்.
பள்ளி நிர்வாகம் செய்த தாமதத்துக்கு மாணவர்களிடம் வசூல் செய்யப்படும் டியூஷன் கட்டணத்துக்கும் எவ்வித தொடர்பில்லாத ஆசிரியர்கள், ஊழியர்கள் ஊதியத்தையும், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் தேவையில்லாமல் நிறுத்தி வைப்பது சரியாகாது.
ஏற்கெனவே கரோனா வைரஸால் மிகுந்த சிரமத்தில் அன்றாட உணவு மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு சொல்ல முடியாத துயரத்தில் உள்ளோம்.
புதுச்சேரியில் மொத்தம் 32 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் என 450 பேர் பணிபுரிகின்றனர். ஓய்வூதியர்கள் 350 பேர் உள்ளனர். மொத்தம் 800 குடும்பத்தினர் இதனால் பாதிப்பில் உள்ளதால் துணைநிலை ஆளுநர், முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும்" என்று மார்ட்டின் கென்னடி தெரிவித்தார்.