அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி – வீட்டு வாடகையை அரசே செலுத்தும்
அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி – வீட்டு வாடகையை அரசே செலுத்தும்
வீட்டு வாடகை செலுத்த முடியாத அடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
வீட்டு வாடகை செலுத்த முடியாத மக்களின் வீட்டு வாடகையை டெல்லி அரசே செலுத்தும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது. தற்போதுவரை 900க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வேலை புரிபவர்கள். முழு ஊரடங்கால், அவர்கள் வேலை இல்லாமல் தவித்து வருவது மட்டுமல்லாமல், அவர்களது சொந்த ஊருக்கே செல்ல தயாராகிவிட்டனர். சிலரோ, போக்குவரத்து வசதி இல்லாததால், தங்களது ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், முழு ஊரடங்கால் பாதிப்படைந்த அடித்தட்டு மக்களுக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, “டெல்லியில் வாழும் மக்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்லவேண்டும் என்று நினைக்கின்றனர். கரோனா வைரஸ் மிகவும் கொடியது. 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தால் கூட உடனே அது பரவிவிடும்.
டெல்லி முதல்வர்
நீங்கள் இங்கேயே இருங்கள். ஊருக்கு சென்றால், உங்களில் யார் மூலமாவது அனைத்து பகுதிகளுக்கும் கரோனா பரவிவிடும். தற்போதைய இக்கட்டான கால கட்டத்தில் வீட்டு வாடகையை உடனே செலுத்துமாறு கேட்கக்கூடாது. சில மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். வீட்டு வாடகை செலுத்த முடியாத அடித்தட்டு மக்களின் வாடகையை அரசே செலுத்தும்” என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு டெல்லி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.