Breaking News

தேர்வு நோக்கில் கரோனா விடுமுறையைக் கடப்பது எப்படி

தேர்வு நோக்கில் கரோனா விடுமுறையைக் கடப்பது எப்படி



N எஸ்.எஸ்.லெனின் N 
கடந்த வாரத்தில் இந்தியாவில் அறிமுகமானாலும், கரோனா விடுமுறை என்பது பல நாடுகளிலும் ஜனவரி முதலே நடைமுறையில் உள்ளது. சர்வதேச அளவில் மாணவர் உலகம் இதுவரை பார்க்காத நீண்ட விடுமுறையாக இதைக் கணித்துள்ளார்கள். மார்ச் முதல் வாரம் வரை உலகெங்கும் சுமார் 30 கோடி மாணவர்கள் கரோனா பாதிப்பால் வீட்டில் முடங்கியுள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 


இந்த மாணவர்களின் அன்றாடக் கல்வி முதல் தேர்வு நடைமுறைகள் வரை அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளன. அரசுகள், கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பிலும் இந்த அனுபவத்திலிருந்து எதிர்காலத்துக்கான கல்வி நடைமுறைகள் திட்டமிடப்பட உள்ளன. இணைய வழிக் கல்விக்கு இனி முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாணவர்களும் தம் பங்குக்குப் புதிய சவால்களைச் சந்திக்கத் தயாராக வேண்டும். 


வீட்டிலிருந்தே படிக்கலாம் 
கரோனா பாதிப்பால் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளைத் தொடருமாறு பணித்துள்ளன. அப்படிப் பெரியவர்கள் உடனிருக்கும்போது அவர்களுடைய பாணியிலேயே கல்விப் பணிகளை மாணவர்கள் வீட்டிலிருந்தே தொடங்கலாம். வீட்டிலிருந்தபடி பணிபுரிவோர் பலரும் வழக்கமாக அலுவலகம் செல்வது போன்றே புறப்படுவார்கள். 

இந்தப் புறப்பாடு வீட்டின் இன்னொரு மூலை அல்லது அறையிலிருக்கும் ‘அலுவலக’ மேஜையில் நிலைகொள்ளும். மனதளவிலான தயாரிப்பில், சூழலுக்கான ஏற்பாடுகளையும் தீர்மானித்துக்கொண்டு அந்தப் பணியாளர் தனது ‘அலுவலக’க் கடமைகளைத் தொடங்குவார். மாணவர்களும் இதே வகையில் தினசரி கல்வி நிலையங்களுக்குப் புறப்படுவதற்கான தயாரிப்புடன் அன்றாடப் படிப்பு - திருப்புதல் களைத் திட்டமிட்டுத் தொடரலாம்.