Breaking News

அரசு பள்ளி, சமூக நலக்கூடங்களில் வடமாநில மக்களை தங்கவைக்க எதிர்ப்பு

அரசு பள்ளி, சமூக நலக்கூடங்களில் வடமாநில மக்களை தங்கவைக்க எதிர்ப்பு


   கொரோனா பீதியால் குடியிருப்புவாசிகள் போர்க்கொடி * போலீசார், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் திருவொற்றியூர்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடமாநில மக்களை திருவொற்றியூர் அரசு பள்ளி மற்றும் சமூக நலக்கூடங்களில் தங்க வைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருந்தனர். எந்த வாகனங்களும் செல்லவில்லை, ஓட்டல்கள், சாலையோர கடைகளும் முற்றிலுமாக மூடப்பட்டன. மேலும், வருகின்ற 31ம் தேதி வரை அனைத்து ரயில்களும், வெளி மாநிலத்துக்கு செல்லக்கூடிய பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

  இதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தங்கி பணிபுரிந்து வந்த வடமாநில மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல கடந்த இரண்டு தினங்களாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்தனர். ஆனால், ரயில்கள் ரத்து காரணமாக அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இவர்களை அழைத்து சென்று, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்தனர். பின்னர் இவர்களை திருவொற்றியூர், மாதவரம், புழல் போன்ற பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் மண்டபங்களில் தங்க வைத்தால் மாநகராட்சிக்கு செலவாகும் என்பதால் இவர்களை அரசு பள்ளி மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைக்க முடிவு செய்தனர்.


    அதன்படி திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வட இந்தியர்களை திருச்சினாங்குப்பம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை ஏற்பாடு செய்தனர். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் வடமாநில மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளியின் முன்பு திரண்டு, இங்கு அழைத்து வரப்பட்டுள்ள வடமாநில மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம், என்று எங்களுக்கு அச்சம் உள்ளது. அப்படி யாருக்காவது பாதிப்பு இருந்தால், சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் எங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அதனால் இங்கே இவர்களை தங்க வைக்க கூடாது, என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரியிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேறு வழியின்றி தொடர்ந்து திருமண மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.


  இதேபோல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மணலி அருகே சின்னசேக்காடு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் வடமாநில மக்களை தங்க வைக்க கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை மாதவரத்திற்கு அழைத்துச் சென்று மாநகராட்சி அதிகாரிகள் தங்க வைத்தனர். புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, மங்கம்மாள் தோட்டம் பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் வடமாநிலங்களை சேர்ந்த 63 பேரை நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி அதிகாரிகள் வாகனங்கள் மூலம் கொண்டு வந்து தங்கவைக்க முயற்சித்தனர். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு, வடமாநில மக்களை இங்கு தங்கவை கக்கூடாது.

   அவர்கள் மூலம் இப்பகுதி மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலாம். அவர்களை வேறு எங்காவது தங்கவையுங்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த 63 பேரையும் வியாசர்பாடி, முல்லை நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்து சென்றனர். பெரம்பூர்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 பேர், ஓட்டேரி, சந்திரயோகி சமாதி தெருவில் உள்ள சமுதாய நல கூட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, உணவு வழங்கப்பட்டது.