மாணவர்கள்களுக்கு உளவியல் ஆலோசனைகள்: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 6 வழிகாட்டுதல்கள்
மாணவர்கள்களுக்கு உளவியல் ஆலோசனைகள்: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 6 வழிகாட்டுதல்கள்
மாணவர்களுக்கு, பெற்றோர்களுக்குப் பாலினப் பாகுபாடு, உளவியல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பாலின பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள அறிவிப்பாணை வருமாறு: “2019-20-ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 556 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 89 ஆயிரத்து 140 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் முதல் நிலை வழிகாட்டுபவர்களாக மாறவேண்டும். கீழ்க்காணும் 6 நிலைப்பாடுகளில் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
1. வழிகாட்டுதல் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை அளித்தல்:
மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணையப் பாதுகாப்பு, உடல் மற்றும் மன நலப் பாதுகாப்பு, பாலினப் பாகுபாடு, வளரிளம் பருவக் கல்வி, சுய விழிப்புணர்வு, பிறர் மனநிலை அறிந்து செயல்படுதல், மன அழுத்தம் மற்றும் மன எழுச்சிகளை கையாளும் திறன் போன்றவை குறித்தும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் வேண்டும். உடல் நலம் மற்றும் சுகாதார பயிற்சி வழங்குதல் வேண்டும். மாணவர்களுக்கு நன்னெறி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்பை எடுத்துக் கூறி, அவர்களிடம் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நிலை நிறுத்துதல் வேண்டும். அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களிடம் உள்ள பயத்தின் காரணமாக, கடந்த ஆண்டு அதிகப்படியான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த பயத்தை நீக்கும் வகையில் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த பின்பு உள்ள மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சமுதாயத்தில் ஏமாற்றுபவர்களிடமிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது மற்றும் தவறாக வழிநடத்தும் நபர்களை எவ்வாறு இனம் கண்டு கொள்வது என்பது பற்றியும், சரியான தொடுதல், தவறான தொடுதல் (good touch- bad touch) என்பது பற்றியும், ஒரு உறவினர் அல்லது நண்பர் எந்த முறையில் நம்மோடு பழகுகிறார், அவருடைய செயல்பாடுகளில் வேண்டும் செயல்கள், வேண்டாதவை எவை என்பதைக் கண்டு உணர்ந்து, தெரிந்து கொள்வது பற்றி அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், எல்லா நேரங்களிலும் செல்போன்களைப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பயன்படுத்துவது பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
2.பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு:
பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒரு நாள் பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு மூன்று வகுப்புகளை ஒன்றிணைத்து ஏற்படுத்தவேண்டும். பள்ளிக்கு, பள்ளிக்கு வெளியில், பள்ளிக்கு செல்லும்போது மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி பெற்றோர்களின் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளச் செய்யவேண்டும். இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது, சாலையில் விபத்தில் சிக்கும்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
3.மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கான விழிப்புணர்வு உருவாக்கம்:
மாணவர்களுக்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை பள்ளிக்கு அழைத்து அவர்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேச வைத்து அவர்கள் மூலம் தகுந்த அறிவுரைகள் வழங்கி மாணவர்கள் பள்ளியிலும் வீட்டிலும் சமுதாயத்திலும் பாதுகாப்பாக இருக்க வழி காட்டலாம்.
4.மாணவர்கள் எண்ணங்களை தெரிவிக்க வாய்ப்பளித்தல்:
மாணவர்கள் பள்ளிகளில் தங்கள் பாதுகாப்பு சார்ந்த பின்னூட்டங்களை (feedback) எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும் வகையில் வழிவகைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக மாணவிகள் தங்கள் பின்னூட்டங்களை ஆசிரியர்களிடம் வழங்க வாய்ப்பு அளிக்கவேண்டும். பின்னூட்டங்கள் வாயிலாக மாணவர்களின் பாதுகாப்பில் ஏதேனும் குறைகள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இணைந்து கடமையாற்ற வேண்டும்.
5. புகார்/ஆலோசனைப் பெட்டி வைத்தல்:
மாணவர்கள் தங்கள் கருத்துகளை புகார்களை தெரிவிக்கும் வகையில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆலோசனை மற்றும் புகார் பெட்டிகள் வைத்தல் வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை ஆய்வு செய்து தேவையேற்படின் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
6. போஸ்டராக வெளியிட்டு கடைபிடிக்க வைத்தல்:
இது சம்பந்தமான போஸ்டர்கள் அச்சிட்டு மாணவர்களிடையே வழங்கி கடைபிடிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்”. இவ்வாறு அந்த அறிவிப்பு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.