Breaking News

பிளஸ் 2 ஆங்கில தேர்வில் புத்தகத்தில் இல்லாத கேள்விகள்

   பிளஸ் 2 ஆங்கில மொழி தேர்வில், பாடத்தில் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு, 2ம் தேதி துவங்கியது.

    முதல் நாள்நடந்த, மொழி பாட தேர்வுகள், மிகவும் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். ஆங்கில மொழி தாள் தேர்வு, நேற்று நடந்தது. இதில், மொத்தம், 90 மதிப்பெண்களுக்கு, வினாக்கள் இடம் பெற்றன. அவற்றில், ஒரு மதிப்பெண், இரண்டுமதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகளில் பெரும்பாலானவை, பாடப்புத்தகத்தில் இருந்து கேட்கப்படவில்லை என்றும், பாடத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகள் என்றும், மாணவர்கள் தெரிவித்தனர். பல தேர்வறைகளில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அந்த வினாக்களை புரிந்து கொள்ள முடியாமல், சிரமப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து, பிளஸ் 2 ஆங்கில ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:புதிய பாடத்திட்டம் என்பதால், பாடப்புத்தகங்களில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்ட பின், கடினமான கேள்விகள் கேட்பதில் தவறு இல்லை. இந்த ஆண்டு, பாடப்புத்தகமே தாமதமாகத் தான் வழங்கப்பட்டுள்ளது. அதனால், பாடங்களை முடிப்பதற்கே, நாட்கள் போதுமானதாக இல்லை.இந்நிலையில், பாடங்களில் இல்லாத அம்சங்கள், வினாத்தாளில் அதிக அளவில் இடம் பிடித்திருப்பது, மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுக்கு, யோசித்து எழுதுவது போல், பள்ளி மாணவர்களுக்கு, இந்த வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது.

  இதுபோன்ற கேள்விகளுக்கு, தமிழக மாணவர்கள், இன்னும் தயாராகவில்லை. கற்பித்தல் முறையில், அரசு முழுமையான மாற்றம் கொண்டு வந்த பின்பே, இதுபோன்ற கேள்விகளை கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.இந்த தேர்வில், 'காப்பி' அடித்ததாக, தனி தேர்வர்கள் இருவர் சிக்கினர்.