வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்கிறீர்களா கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்கிறீர்களா கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
கொரோனோ வைரஸ் தாக்குதல் அதிகமாகும் எனும் அச்சத்தால் நிறுவனங்களெல்லாம் “வீட்டிலிருந்தே வேலை செய்யும்” முறையை இப்போது அமல்படுத்தியிருக்கின்றன.
வீட்டில் இருந்து சிறப்பாக வேலை செய்ய இந்த 10 விஷயங்களையும் மனதில் கொள்ளுங்கள்.
1) வேலை நேரத்தை மாற்ற வேண்டாம். 9 முதல் 5 மணி வரை வேலை நேரமெனில் அதையே வீட்டிலும் கடைபிடியுங்கள். வீட்டில் இருக்கும் நபர்களிடமும் அதை முன்கூட்டியே சொல்லி விடுங்கள். வீட்டில் இருந்து வேலை செய்வதும், விடுப்பில் இருப்பதும் வேறு வேறு என்பதையும் அவர்களுக்கு புரிய வையுங்கள்.
2) அலுவலகத்துக்கு செல்லும்போது எப்படி தயாராவீர்களோ, அதே போல குளித்து நல்ல ஆடை உடுத்தி ஒரு தனியான, வசதியான இடத்தில் இருந்து வேலையை ஆரம்பியுங்கள். அப்போது தான் மனமும் உடலும் உற்சாகமாக இருக்கும். வேலை செய்வதற்கு தனியே ஒரு அறை இருப்பது நல்லது.
3) அலுவலக தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அலுவலகத்தில் இருக்கும் போது தகவல்களை எப்படி பாதுகாப்பாய் வைத்திருப்பீர்களோ அதை விட அதிக கவனத்துடன் வீட்டில் பண செய்யும் போது அலுவலக தகவல்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
4) உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தை போலவே வீட்டிலும் திட்டமிட்டு பணியாற்றுங்கள். வீட்டிலிருந்து வேலை செய்யும் போது நாம் என்னென்ன பணிகளை முடிக்கிறோம் என்பதை வைத்தே நாம் வேலை செய்கிறோமா? இல்லையா? என்பதை நிறுவனம் உறுதி செய்யும். எனவே அதில் கவனம் செலுத்துங்கள்.
5) மின்னஞ்சலிலும், அலுவலக வாட்ஸ் அப் குழுக்களிலும், தொலைபேசியிலும் எப்போதும் ‘ஆக்டிவ்’ ஆக இருங்கள். வீட்டிலிருந்து வேலை செய்யும் போது இந்த கம்யூனிகேஷன் ரொம்பவே முக்கியம்.
6) அலுவலகத்தில் எடுப்பதை போலவே தேவையான் ‘பிரேக்’ எடுத்து கொள்ளுங்கள். கொஞ்ச நேரம் தனிப்பட்ட வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால், அதை முன்கூட்டியே உங்கள் மேலதிகாரியிடம் தெரிவித்துவிடுங்கள். அது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
7) கவனத்தை சிதைக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம். உதாரணமாக, தொலைக்காட்சி, யூ-டியூப்i, பேஸ்புக், நண்பர் அரட்டை போன்றவை உங்களுடைய நேரத்தை திருடாமல் பார்த்து கொள்ளுங்கள்.
8) வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது நாள் முழுவதும் வேலை செய்வதல்ல. வேலை நேரம் முடிந்ததும் அதை மேலதிகாரிக்கு தெரிவித்து விட்டு, உங்களுடைய தினசரி வாழ்க்கைக்குள் நுழைந்து விடுங்கள். ஏதேனும் அவசர வேலை இருந்தால் ஒழிய, வேலை நேரத்தை நீட்டித்துக்கொண்டே செல்லாதீர்கள்.
9) வீட்டிலிருந்து வேலை செய்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களும் தயாராக இருக்கிறதா என்பதை முன்கூட்டியே சரி பார்த்து கொள்ளுங்கள். லேப்டாப், வை-பை, போன், இன்டர்நெட் என என்னென்ன வசதி வேண்டுமோ அதெல்லாம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
10) ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்கிறோம் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள். வீட்டில் இருந்து வேலை செய்யும் போது நாம் என்ன செய்கிறோம் என்பதை மேலதிகாரி அறிய வாய்ப்பு குறைவு. எனவே சின்னச் சின்ன வேலைகளைக் கூட பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள்.