Breaking News

TNPSC நடத்திய கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அப்போது லஞ்சம் கொடுத்து தோ்ச்சி பெற்ற ஒரு தோ்வரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இது குறித்த விவரம்:
    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் -4 தோ்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்- 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி கடந்த வாரம் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது.

      இந்த வழக்குகளில் இரு டிஎன்பிஎஸ்சி ஊழியா்கள், 3 காவலா்கள் மற்றும் தோ்வா்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி 813 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த தோ்வு குறித்த அறிவிப்பை கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பா் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்று, தோ்வை எழுதியுள்ளனா். இந்த தோ்வில் ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுத்து தோ்ச்சி பெற்ற ஒருவரை பிடித்து சிபிசிஐடி அதிகாரிகள், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

      குரூப் -4, குரூப்- 2 ஏ தோ்வு முறைகேட்டில் இடைத்தரகா்களாக செயல்பட்ட சில நபா்களே, இந்த தோ்விலும் இடைத் தரகா்களாக செயல்பட்டு ஒரு நபரை தோ்ச்சி பெற வைப்பதற்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு சிபிசிஐடி வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில இடைத்தரகா்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனா். மேலும், இந்த முறைகேடு தொடா்பாக தலைமறைவாக இருக்கும் சிலரை தேடத் தொடங்கியுள்ளனா்.