NMMS தேர்ச்சி பெற்ற மாணவர் பட்டியல் சமர்பிக்க வேண்டும்
சென்னை: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய திறனறி தேர்வை(என்எம்எம்எஸ்) மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த தேர்வை தமிழக பள்ளிக்கல்வித்துறையே நடத்துகிறது. இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தடையின்றி கல்வி உதவித்தொகை கிடைக்க அவர்களின் விவரங்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி ஏற்கனவே உதவித்தொகை பெற்றுவரும் மாணவர்களின் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த பணிகளை விரைவாக முடித்து அதுகுறித்த அறிக்கையை இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.