Breaking News

டிஎன்பிஎஸ்சி-யில் மட்டுமல்ல; டி.ஆர்.பி-யிலும்..?!' - தேர்வு மோசடியின் அடுத்த எபிசோட்

டிஎன்பிஎஸ்சி-யில் மட்டுமல்ல; டி.ஆர்.பி-யிலும்..?!' - தேர்வு மோசடியின் அடுத்த எபிசோட்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப்2 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


   டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு தேர்வுகளிலும் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் தேர்ந்தெடுத்த தேர்வு மையம் ராமேஸ்வரம். இதனால் ராமேஸ்வரம் தேர்வு மையத்திலிருந்து தேர்ச்சி பெற்றவர்கள் மீது சிபிசிஐடி போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. இதற்கிடையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து விசாரித்த போலீஸாருக்கு தினந்தோறும் அதிர்ச்சி ரக தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.



   தேர்வு முறைகேட்டில் புரோக்கர்களாக சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், சிவகங்கை மாவட்டம், சென்னையில் பணியாற்றும் பெரிய கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி ஆகியோரை போலீஸார் தேடிவந்தனர். தற்போது காவலர் சித்தாண்டியை சென்னை சிபிசிஐடி போலீஸார் பிடித்து விசாரித்துவருகின்றனர். ஜெயக்குமாரைத் தேடி ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு போலீஸ் டீம் சென்றுள்ளது. சித்தாண்டியிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களை போலீஸார் வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் சித்தாண்டி குறித்த ரகசியத் தகவல் கிடைத்தது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதோடு தரவரிசைப் பட்டியலிலும் இடம்பிடித்தது தெரியவந்தது. அதில் சித்தாண்டியின் மனைவி பிரியா, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து சென்னை எழிலகத்தில் பணியாற்றிவருகிறார். சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன், காரைக்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிவரும் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தோம்.



   சித்தாண்டியும் அவரின் மனைவி பிரியாவும் நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டனர். அதனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ஆனால், சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன், காரைக்குடி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தபோது அவரைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில் அவர் தன்னுடைய சகோதரர் சித்தாண்டி மூலம் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதோடு பணியில் சேர்ந்த தகவலைத் தெரிவித்தார். அதன்பேரில் வேல்முருகனைக் கைது செய்தோம். சித்தாண்டியையும் பிரியாவையும் தேடிவந்தோம்.
இந்தச் சமயத்தில் சித்தாண்டி, தன்னுடைய சிவகங்கை வீட்டுக்கு வரும் ரகசிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது. ஏற்கெனவே சித்தாண்டியை அவரின் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸார் கண்காணித்து வந்தனர். நேற்று அவர் வந்தபோது போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்துவருகிறோம். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளோம்.


   இதற்கிடையில் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். அவர் மூலம் யார், யார் பணியில் சேர்ந்தார்கள் என்ற விவரத்தையும் கூறியுள்ளார். அவர்களிடம் எவ்வளவு பணம் வாங்கியதையும் தெரிவித்துள்ளார். அதில் தனக்குக் கிடைத்த கமிஷன் தொகை, ஜெயக்குமாருக்குக் கொடுத்த பணம் போன்ற தகவல்களையும் சித்தாண்டி கூறினார். சித்தாண்டி மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி முறைகேடாக தேர்ச்சி பெற்றவர்களிடம் அடுத்தடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது அவர்களில் சிலர் அரசு வேலையில் உள்ளனர்.
சித்தாண்டிக்கும் ஜெயக்குமாருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்பு இருந்துவந்துள்ளது. கல்வித்துறையில் புரோக்கராகச் செயல்பட்டுவரும் ஒருவர் ஜெயக்குமாரை சித்தாண்டிக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார். அவருக்கும் தேர்வு முறைகேட்டிற்கும் தொடர்பு உள்ளது. ஜெயக்குமார் மூலம்தான் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக சித்தாண்டி கூறியுள்ளார். அதுதொடர்பாக ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தினால்தான் சித்தாண்டி கூறுவது உண்மையா என்பது தெரியவரும்" என்றார்.



   தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் சித்தாண்டியை ஜெயக்குமார் தரப்பு தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அப்போது, சில முக்கிய தகவல்களை சித்தாண்டிக்கு அந்தத் தரப்பு கூறியுள்ளது. அதனால்தான் சிபிசிஐடி போலீஸார், சித்தாண்டியிடம் விசாரித்தபோது கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே அவர் ஒற்றை வரியில் பதிலளித்தார். மேலும் ஜெயக்குமாரைத் தவிர வேறு யாரின் பெயரையும் அவர் சொல்ல மறுத்துள்ளார். சித்தாண்டியின் தகவல்படி ஜெயக்குமார்தான் டிஎன்பிஎஸ்சியில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. இருப்பினும் சித்தாண்டியின் போன் அழைப்புகள், வங்கிக் கணக்கு விவரங்களை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.
சித்தாண்டியிடம் விசாரித்தபோது அவர் இன்னொரு முக்கிய தகவல் ஒன்றை போலீஸாரிடம் கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சியைப் போல கல்வித்துறையிலும் ஜெயக்குமாருக்கு அதிக தொடர்பு உள்ளது. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில்கூட ஜெயக்குமாரின் தலையீடு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் ஜெயக்குமார் முறைகேடு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் புகாரளித்தால் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த தயாராக உள்ளனர்.


   இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தில் கேட்டபோது, ``ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட இதர தேர்வுகளில் முறைகேடுகள் நடந்த‌தா என முதலில் ஆய்வு செய்யப்பட வேண்டும். பின்னர் முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டால் புகாரளிக்கப்படும்" என்றனர். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்தார். அவர் எதற்காக வந்தார் என்று விசாரித்தபோது நண்பரைச் சந்திக்க வந்ததாகத் தகவல் கிடைத்தது.